Thursday, October 1, 2009

மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள்


பொருளா சிந்தனையா என்ற கேள்வி தத்துவ துறையின் மிக அடிப்படையான பிரச்சினையாகும். அதாவது பொருளுக்கும் சிந்தனைக்கும் உள்ள உறவுதான் இன்றுவரை முதன்மையான விசயமாக இருக்கின்றது. வாழ்நிலை சிந்தனையைத் தீர்மானிக்கின்றதா? சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கின்றதா? இந்த கேள்விகளுக்கு விடைத் தேடமுற்படும் போதுதான் சிந்தனையின் ஒரு பகுதியான கலை இலக்கிய துறைக்கான கோட்பாடுகள் உருவாகின்றன.

வாழ்நிலை சிந்தனையைத் தீர்மானிக்கின்றது. சிந்தனை வாழ்நிலையைப் பிரதிலிபலிக்கின்றது என்பது மார்க்சியக் கோட்பாடு ஆகும்.இந்தத் தத்துவ‌ கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கீழ்கண்ட இலக்கிய கோட்பாடுகள் தோன்றின.

1. அடித்தள மேற்கட்டுமான உறவு

2. பிரதிபலிப்புக் கோட்பாடு

3. சோசலிச எதார்த்தவாதம்

அடித்தள மேற்கட்டுமான உறவுஅடித்தளம் என்பது சமூக, பொருளாதார வாழ்வைக் குறிக்கும். மேற்கட்டுமானம் என்பது அரசியல், கலை இலக்கியம், தத்துவம் போன்ற சிந்தனை வாழ்வைக் குறிக்கும். மேற்கண்ட மார்க்சிய தத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகும்போது அடிக்கட்டுமானம்தான் மேற்கட்டுமானத்தைத் தீர்மானிக்கின்றது என்ற மார்க்சிய இலக்கியக் கோட்பாடு உருவானது. ஆக பொருளாதார வாழ்வுதான் கலை இலக்கியம் போன்ற சிந்தனை வாழ்வைத் தீர்மானிக்கின்றது என்ற முடிவு எட்டப்படுகின்றது.இது ஒரு முழுமையான கோட்பாடாக புரிந்துக்கொள்ளக் கூடாது என‌ மார்க்சும் எங்கெல்சும் அறிவுறுத்தியுள்ளனர். அதாவது சமுதாய யதார்த்தம்தான் கலை இலக்கியப் போக்கைத் தீர்மானிக்கும் என்ற ஒற்றைப் பரிணாமத்தில் புரிந்துக் கொள்வது எந்திர தனமான புரிதலுக்கு இட்டுச் செல்லும்.

கலை இலக்கியத்திற்கும் சமுதாய யதார்த்த‌திற்கும் உள்ள உறவை இயங்கியல் ரீதியில் புரிந்துக் கொள்ளப்படவேண்டும். சமுதாய யதார்த்தம்தான் கலை இலக்கியப் போக்கைத் தீர்மானிக்கும் என்று கராறான பார்வையில் புரிந்துக் கொண்டால் சிந்தனையின் பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிடும் தவறிழைக்க நேரிடும். சமுதாய யதார்த்தத்தின் மீதான கலை இலக்கியத்தின் செல்வாக்கு குறிப்பிடத் தக்கதாகும். சில சமயங்களில் சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கின்ற பாத்திரத்தை வகிக்கும் என்பதை மறுத்தலாகாது.இதைத்தான் ஏங்கல்சு கீழ்கண்டவாறு கூறினார்."வரலாற்று பொருள்முதல் வாதக் கருத்தின்படி, வரலாற்றிலே இறுதியான நிர்ணயிக்கும் அம்சம் யதார்த்த வாழ்க்கையின் உற்பத்தியும் பெருக்கமும்தான். இதற்கு மேல் நானோ அல்லது மார்க்சோ என்றும் உறுதி கூறியதில்லை. எனவே பொருளாதார அம்சம் மட்டுமே நிர்ணயிக்கும் அம்சமென எவரேனும் இதனைத் திரித்து கூறுவாரேயானால் அவர் அந்தச் சித்தாந்தத்தையே ஒரு அர்த்தமற்ற அபத்தமான சொல்லாட்சியாக மாற்றி விடுகிறார்

"இது குறித்து மாவோவின் கருத்தைப் பார்ப்போம். "சில நிலைமைகளில் உற்பத்தி உறவுகள், சித்தாந்தம், மேற்கட்டுமானம் ஆகியன தங்கள் தரப்பில் பிரதானமான, நிர்ணயகரமான பங்கை ஆற்றுகின்றன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்"பொருளாதார வாழ்வு எவ்வாறு கலை இலக்கியம் போன்ற சிந்தனை வாழ்வைத் தீர்மானிக்கின்றதோ அதே போன்று சில நிலைமைகளில் கலை இலக்கிய சிந்தனை, பொருளாதார வாழ்வைத் தீர்மானிப்பதாகவும் இருக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.பிரதிபலித்தல் கோட்பாடுசமுதாயத்தில் நிலவுகின்ற வர்க்கமுரண்பாடுகளையும் போராட்டங்களையும் கலை இலக்கியத்தில் பிரதிபலிக்கின்றது என்ற கோட்பாடு மார்க்சியத்தில் பிரதிபலித்தல் கோட்பாடு என்றழைக்க‌ப்படுகின்றது.

வர்க்க உணர்வுகளை கலைஇலக்கியம் பிரதிபலிப்பதைக் காணலாம். சமூக நிலைமைகளைப் பிரதிபலிப்பதோடு தனது பணி முடிந்துவிடவில்லை. மாறாக, சமூகத்தை மாற்றி அமைக்கும் நோக்கிலும் மார்க்சிய இலக்கிய கோட்பாடு செயலாற்ற இயலும் என்று பிரதிபலித்தல் கோட்பாடு வலியுறுத்தப்படுகின்றது.

பிரதிபலித்தல் கோட்பாடு இரு வகைப்படும்.

1), இருப்பதை அப்படியே பிரதிபலித்தல்;

2), இருப்பதற்கு எதிர்வினை ஆற்றுதல்.

இவ்வாறு பிரதிபலிப்பு என்பதை இருவகைப் பொருள்களையும் உள்ளடக்கி லெனின் பயன்படுத்துகின்றார்.சோசலிச எதார்த்தவாதம்யதார்த்தவாதம் என்பது உள்ளதை உள்ளவாறே சொல்வதாகும். விமரிசன யதார்த்தவாதம் என்பது முதலாளித்துவச் சூழலை விமர்சனம் செய்வது, முதலாளித்துவ சமுதாய முரண்களை வெளிப்படுத்துவது ஆகும். சோசலிச யதார்த்தவாதம் என்பது மனிதன் இன்று எப்படி இருக்கிறான் என்பதை மட்டும் அல்ல், நாளை எப்படி இருப்பான், இருக்க வேண்டும் என்பதையும் சித்தரிப்பதாக அமையவேண்டும் என்று விளக்குகின்றது.

கலை இலக்கியம் என்பது சமுதாய மாற்றத்திற்கு பயன்பட வேண்டும் என்பதே சோசலிச எதார்த்தவாதத்தின் நோக்கம் ஆகும். இக்கோட்பாட்டில் அரசியல் முதன்மை இடம் வகிக்கிறது. ஆகவே இந்த வாதம், கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது.சோசலிச யதார்த்தவாதத்தின் அழகியல் அடிப்படைகளைக் காண்போம்.

1. பொதுவுடைமைத் தத்துவத்தில் ஈடுபாடு

2. மக்களுக்குத் தொண்டு செய்தல்

3. சுரண்டப்படும் வர்க்கத்திற்கு சார்பாக நிற்றல்

4.தொழிலாளர் போராட்டங்களில் நெருங்கிய தொடர்பு வைத்தல்

5. சோசலிச மனித நேயம்

6. உலகப் பார்வை

7.சமுதாயம் முன்னேக்கித்தான் வளரும் என்ற நம்பிக்கை

8. உருவ வாதம், அகநோக்கு பழமைவாதம் ஆகியனவற்றுக்கு எதிர்ப்பு.

நன்றி - philsophydebate

No comments: