Tuesday, June 30, 2009

சாரு, ஜெயமோகன் :- வேதம் ஓதும் சாத்தான்கள்

இணையத்தில் எழுதும் இரண்டு தமிழ் எழுத்தாளர்கள். இரண்டும் வெவ்வேறு ரகம். இந்தப் பதிவு இவர்களது பதிவுகள் குறித்த ‘ஏமாற்றங்களை’ முன்வைக்கிறது. ஈழத்தில் போர் தொடர்ந்து மாதங்களாக நிகழ்ந்துகொண்டிருந்த போதெல்லாம் ஏதும் சொல்லாத இந்த இரண்டு பிரக்ருதிகளும் இறுதிவரை எதுவும் சொல்லாமலே இருந்திருந்தால் சரி - எல்லாம் முடிந்தபின் தர்ம கோவிந்தா போடுவது போல அஹிம்சை குறித்து எழுதுகிறேன் என்று பிலாக்கணத்தை வைத்து நானும் இதில் கருத்து சொன்னேன் என்று துண்டு போட்டு வைத்திருக்கிறார்கள்.

சாரு நிவேதிதா செ கெபாரா பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார் - சீலேயில் ஸல்வதோர் அயெந்தெ எப்படித் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார் என்று ரிஸ்தோரெந்தெயில் சிவப்பு ஒயின் அல்லது டாம் பெரிஞ்யோன் குடித்து சிந்தித்து ஸோஃபாக்ளீஸின் துன்பியல் நாடகங்கள் கண்முன் நடனமாட கலா கௌமுதியில் எழுதுவார். கியெர்மோ கப்ரெரா இன்ஃபாந்தெயின் கூவா பற்றி எழுதுவார். கப்ரெரா இன்ஃபாந்தெயின் ‘பொறியில் மூன்று புலிகளை’ (Three trapped tigers - தலைப்பு சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமாக உள்ளது அல்லவா?) மூல எஸ்பஞோலில் படிக்கவேண்டுமென்று நான் ஸ்பானிஷ் கிளாஸ் போனபோது மாட்டிய ‘குட்டி’ பற்றி இந்த தமிழ் ஹென்றி மில்லர், செக்ஸஸ்-ப்ளெக்ஸஸ்-நெக்ஸஸ்-கடகரேகைக் கதைகள் எழுதுவார். கார்ஸீயா லோர்க்கா குறித்து எழுதுவார்; ஏன், யுக்கியோ மிஷிமா செப்புக்கு செய்துகொண்டு வீரமரணம் எய்தியது பற்றியும் கூட எழுதுவார். நபக்கவ் விட்ட குசுவைப் புட்டியில் அடைத்து ‘உன்னத சங்கீதம்’ என்று திறப்பார் - இதை ரசிக்க தமிழனுக்குத் தெரியாது என்பார். கக்கத்தைச் சிரைக்கவேண்டுமானால் கூடுதல் கட்டணம் தரவேண்டுமென்று போராட்டம் நடத்தவும் (தவறேதுமில்லை தான்), குற்றாலம் அருவியில் குளிக்க நகராட்சி வைக்க முயற்சித்த கட்டணத்தை எதிர்க்கவும் (தவறேதுமில்லை தான்), நந்திகிராமத்தில் சாமானியர்களை நொறுக்கி எடுக்கவும் (“தவறேதுமில்லை” தான்) தெரிந்த மாதிரி ஆட்சியில் பங்கிருந்தும் ஈழத்தில் சிதறிச் செத்த ஜனங்களைப் பார்த்தும் பார்க்காமலும் சிவப்புத் துண்டை/தலைப்பாகையைச் சுருட்டி வாயில் திணித்துக்கொண்டு குந்தி உட்கார்ந்திருந்த சில்லுண்டிகள் மாதிரி. அமெரிக்காவில் ‘செ கெபாரா’ ஒரு போதைக்கடிமையான நட்கேஸாக வலதுசாரி “compassionate conservative” ஊடகமுனிகளால் சித்தரிக்கப்படுவதை நாம் சொன்னால் தடாலடி ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாகி அமெரிக்கா ஐரோப்பா மாதிரி புத்திரீதியில் விசாலமடையாத தேசம் என்பார். சாரு நிவேதிதா மாதிரியான eurosnobகளை/oreo cookie/தேங்காய்களை (உள்ளே வெளுப்பு வெளியே கறுப்பு) அமெரிக்காவில் பல்வேறு தளங்களில் பார்க்கலாம் - ஐரோப்பாவிலிருந்து வந்த ஐரோப்பியர்கள், இந்தியாவிலிருந்து வந்த இந்தியர்கள், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சுத்த அமெரிக்கர்கள். பாலாடைக்கட்டி சரியில்லை, மார்ஜரின் சரியில்லை, ஒயின் சரியில்லை, கலாச்சார சுரணையேதுமற்ற அமெரிக்கக் குய்யான்கள் ஒற்றைக்கையால் ஃபோர்க்கால் வெட்டித் தின்கிறார்கள் என்பது மாதிரி. இந்தியர்கள் (ஜெயமோகன் ரக பாரத பிரேமிகள்) வேறு ராகம் - குடும்ப வேல்யூஸ் இல்லை, இது உடலுக்கான நாடு உள்ளத்துக்கான நாடு அல்ல மாதிரி வழக்கமான பல்லவிகள்.

இது அங்கே மட்டுமல்ல - பொதுவானதொரு சள்ளை மனோபாவத்துக்கு - குறிப்பாக சாரு கிண்டலடிக்கும் தயிர்வடை மனோபாவத்துக்கு வெகு பாந்தமானது இது. இந்தியாவில் ஜப்பானியக் கார் வாங்குவதும், ஜப்பானில் அமெரிக்கக் கார் வாங்குவதும், அமெரிக்காவில் ஜெர்மன் கார் வாங்குவதும் ஜெர்மனியில் போய் ஜப்பானியக் கார் வாங்குவதும் மாதிரி. சாரு நிவேதிதாவின் கலாச்சார மீறல்கள் பெரும்பாலும் இந்த ரகமானவை. வாழைப்பழக் குடியரசு டி-ஷர்ட் போடுவதையும் டீசல் ஜீன்ஸ் போடுவதையும் டாமி ஹில்ஃபிகர் ஜட்டி போடுவதையும் ஆட்டைச் சுட்டுத் தின்பதையும் சாராய பாட்டில்கள் முன்பு திரும்பி போஸ் கொடுப்பதை தனது வலைத்தளத்தில் போடுவதையும் அயர்ன் மெய்டன் மாதிரி கி.மு.267களின் ராக் குழுக்களை வைத்து தனது ‘*த்’ (யூத்)தை அளந்துகொள்வதையும் ஒரு ‘அ-தயிர்வடைக் கலாச்சாரமாகக்’ காட்ட முயல்வது மாதிரி. லீ, லீவைஸ் போன்றவற்றின் விற்பனைக்கடைகள் சென்னையில் வந்தபோது சம்பளத்தில் நாலில் ஒரு பங்கைக் கொடுத்தாவது ஒரு லீவைஸ் லீ ஜீன்ஸ் வாங்கி விடவேண்டுமென்று திரிந்துகொண்டிருந்த கும்பல் இருந்தது - சாருவைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது. இப்படி ஊதிப்பெருக்கும் ஒரு ‘எழுத்தாளரிடம்’ சொல்வதற்குக் கருத்து ஏதுமில்லாமலிருப்பதில் தவறேதுமில்லை - அறியாமை தவறுமல்ல. ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் அனைத்தும் தெரிந்தவர்களும் அல்ல.


ஈழப் பிரச்னை பற்றி சாரு ‘எழுதியதை’ வைத்துப் பார்த்தால், செய்தி ஊடகங்கள் வழி செய்திகளை அறிந்துகொள்ளும் ஒரு சராசரித் தமிழனை விட பெரிதாக ஏதும் தெரிந்திருக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அது தவறில்லை, இருந்தாலும் எழுதுகிறார், இந்தியாவின் மாபெரும் அஞ்சால் அலுப்பு மருந்தான காந்திய வழியைப் பற்றி பேசத் தொடங்குகிறார். ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் எழுதிப் போட்ட கட்டுரை கொடுத்த peer pressureல் பொதுவாக இந்தா நானும் ஒன்று என்று ஒன்றைத் தட்டிப் போட்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது, அதில் பெரிதாக ஒன்றும் இல்லை எனினும், அதைக் ‘கவனித்து’ ஜெயமோகன் ஒரு கடிதம் எழுதி தனது வழக்கமான திருதராஷ்டிர ஆலிங்கனத்தைத் தர முயன்றிருக்கிறார் (நீங்கள் எழுதுவதை ரஸிக்கவில்லையானாலும் ‘கவனித்து’ - வார்த்தைப்பிரயோகத்தைக் கவனிக்கவும் - ‘கவனித்து’ வருபவன் என்ற முறையில் நீங்கள் காளைமாட்டில் பால்கறப்பதை நானும் வரவேற்கிறேன் - அன்புடன் ஜெயமோகன்) - இங்கே பீமன் தப்பித்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது, நாட்டுக்கு நல்லது.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் எந்த நாடு சுதந்திரம் அடைந்திருக்கிறது?
இதைக் கேட்கிறார் சாரு நிவேதிதா. நாகரிகமடைந்த எந்த மனிதனும் தவிர்க்க இயலாத, எதிர்கொண்டே ஆகவேண்டிய விஷயங்கள் போர், அழிவு. இப்படி இருந்திருக்கவேண்டியது இந்தக் கேள்வி: ஆயுதப் போராட்டத்தின் மூலம் மட்டும் எந்த நாடு சுதந்திரம் அடைந்திருக்கிறது? எரியும் அடுப்பிலிருந்து தப்பி எண்ணெய்ச் சட்டிக்குள் விழுந்து கிடக்கும் ஈழ மக்களுக்கு இந்த இலவச அறிவுரை. இலங்கை ஊடகங்கள் இதையும் ஒரு பொய்ப் பரப்புரை எனும் - அதையும் சாரு நம்பலாம். சாருவுக்கு எளிதாக இருக்க, தெற்காசியத் துணைக்கண்டத்தை (இந்தியா அஹிம்சை வழியில் பெற்றுத் தந்த பங்களாதேஷின் ‘சுதந்திரம்’ உட்பட) முழுக்கத் தவிர்த்துவிடுவோம். புலிகளை விமர்சிக்கும் சி.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ புத்தகத்தின் (சாரு பாணி hyperbole வழி - அது ஒரு இரண்டாயிரம் பக்க புத்தகம், படித்து முடிக்க இரண்டு வருடம் தேவைப்படும்) தொடக்க அத்தியாயங்களையாவது படித்திருந்தால் கூட எப்படி சாத்வீகப் போராட்டங்கள் வன்முறைக்குத் திரும்புகின்றன என்று விளங்கியிருக்கும். போரால் புலம்பெயர்ந்த கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் (ஏதிலிகள் - அகதிகள்) வாழும் அமெரிக்(கக் காலனிகள்)கா காந்தி வழியில் சத்தியாக்கிரகம் செய்தா ‘சுதந்திரம்’ அடைந்தது? எது அமெரிக்கா, எது சுதந்திரம், எது அமெரிக்க ‘சுதந்திரம்’, செவ்விந்தியர்களைக் கொன்றொழித்த வெள்ளைக் காலனிக் குடியேற்றர்கள் பெற்றதை ‘சுதந்திரம்’ எனமுடியுமா என்பதுபோன்ற முட்டையிலிருந்து கோழியா விட்டையிலிருந்து பூனையா போன்ற கேள்விகளைக்கொண்டு எழுத்தாளர்கள் இவற்றை லாகவமாகக் கையாளலாம். பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், ஜார்ஜ் வாஷிங்டன் போன்ற அமெரிக்க ‘தேசியத் தந்தைகள்’ போரில் தோற்றுப் பிடிபட்டிருந்தால் பிரிட்டிஷார் உடனுக்குடன் தூக்கிலேற்றிச் சாகடித்திருப்பார்கள். அது ஆயுதப்போர். செ கெபாரா சிம்பதைஸர் சாரு, தனது குடும்பமும் இன்னபிற குட்டிகளும் அவரது நாய்களும் அரசாங்க யந்திரத்தால் பிளக்கப்படுவதை நேரில் அனுபவித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன் - காஃப்கா புத்தகங்களில் கே யின் படுக்கையறையுள் எப்படி அதிகாரம் நுழைகிறது, ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984ன் அபத்தம், ஆர்தர் கெஸ்லரின் Darkness at noon என்று பட்டியல் போடுவது மாதிரியான சமாச்சாரங்கள் தவிர்த்து, குறைந்தபட்சம் ஆட்டோ அனுப்பி நொறுக்கப்பட்டாவது. தப்பி ஓட முயலும் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் விசா கொடுத்து அனுப்பிவிட்டு பிறருக்கு விசா மறுத்து நாட்டுக்குள் முடக்கிப் போட்டு குடும்பத்தைச் சிதறடிப்பது என்பது கொம்யூனிஸ இரும்புத்திரை இறங்கிய நாடுகளில் பெர்லின் சுவர் விழும் வரை நிகழ்ந்துகொண்டிருந்ததை, என் வயதொத்த எத்தனையோ பேர் போதைமருந்து, தற்கொலை என்று சென்றதையோ சொகுசான தமிழ்நாட்டில் சோறும் குழம்பும் தின்று வாழ்ந்த நானும் அனுபவித்ததில்லை தான், ஆனால் நேரடியாக நண்பர்கள் வழி கேட்க முடிகிறது இல்லையா? சாருவுக்குப் பணம் பிரச்னை என்றால் வலைத்தளத்தில் எழுதலாம், வாய்ப்பு கிடைத்தால் தளிகை சாப்பிடலாம், ஈழத்தில் நிகழ்ந்த அரசாங்க அடக்குமுறைகள், உரிமை மறுப்புக்கள் கூட வேண்டாம் - ஆனால் சாரு பார்த்த ஃபிரான்ஸில் ரொட்டியில் ப்ரீயும் கேமுன்பேர் பாலாடைக்கட்டியும் தடவித் தின்றது போக ஐரோப்பாவின் மறுபக்கத்தில் ஈஸ்டர்ன் ப்ளாக் நாடுகளில் சூப்பர்மார்க்கெட்டுகளில் வெறும் வினிகர், காய்ந்த ரொட்டி மட்டும் கிடைக்கும், பிற ஏதும் கிடைக்காத அடக்குமுறை/கண்காணிப்பில் சாரு வாழ்ந்திருக்கவேண்டும். சாரு நேசிக்கும் ஃபிரெஞ்சுக் கலாச்சாரம் ஃபிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் ‘புரட்சியின் எதிரிகள்’ என்று வரைமுறையின்றி கியட்டினில் போட்டுத் தள்ளவில்லையா? காம்யுவைக் கரைத்துக் குடித்த சாரு நிவேதிதா, ஃப்ரெஞ்சுக்காரர்களிடமிருந்து அல்ஜீரிய விடுதலை காந்தி வழியிலா கிடைத்தது என்று விளக்குவாரா? ஃபிரெஞ்சுக்காரர்கள் அல்ஜீரியர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிப்பதை அல்ஜீரிய-ஃப்ரெஞ்ச் ஆல்ப்யே கமி (ஆல்பர்ட் காமு/காமுஸ்/காம்யுஸ்/கம்யூஸ்) எலிகள் கொத்துக் கொத்தாக செத்து விழுவதாக The Plagueல் உருவகமாக எழுதினால்தான் சரிப்பட்டு வருமாமா? இவரும் சரி, தன் தேடல்களால் தெருவில் அலைந்து சோத்துருண்டை தின்றதை ஒடுக்குமுறையின் விளைவான ஈழச் சாவுகளுடன் ஈவிரக்கமோ அடிப்படைக் கூச்சமோ இன்றி ஒரு வக்கிரம் பிடித்த ‘ஞானியின்’ தர்க்கச் சமநிலையோடு ஓரிணையில் வைத்து தமிழகத் தமிழர்களின் அரசியல் தேர்வுகளுக்கு வக்காலத்து வாங்கி, என் பிரச்னையே இங்கே தலைபோகிற பிரச்னை என்று நழுவி, இதற்குத் துணையாக பிழைப்புக்கு வழியில்லாதவர்களை இழுத்து தர்க்கக்கவசமாக வைக்கும் ஜெயமோகனும் சரி, ஆ ஊ என்றால் நெல்சன் மண்டேலாவையும் இழுத்து அகிம்சாவாதி காந்தி என்றுவிடுகிறார்கள்.நெல்சன் மண்டேலா சாத்வீகப் போராட்டங்களுக்குத் திரும்புமுன் இனவெறிக்கெதிராக தென்னாப்பிரிக்க அரசாங்க அலுவலகங்களில் குண்டு வைக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார் - அப்போதைய வெள்ளை இனவெறி அரசாங்கம் மண்டேலாவை தீவிரவாதி என்று கட்டம்கட்டி, இப்போது ஜெயமோகன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போகும் ‘கவற்சிமிகுந்த’ அமெரிக்கா 2008 வரை மண்டேலாவை தீவிரவாதிப் பட்டியலில் வைத்திருந்தது. மண்டேலா அமெரிக்காவுக்கு வந்தால் ஜெயமோகன் மாதிரி ஃப்ளோரிடாவுக்கும் பாஸ்டனுக்கும் கலிஃபோர்னியாவுக்கும் போயிருக்க முடியாது - நியூ யார்க்கில் ஐக்கிய நாடுகள் கட்டிடத்துக்குள் மட்டும்தான் போயிருக்க முடியும் (சர்வதேச எல்லை என்பதால்). இந்தத் தடை, 2008ல் தான் நீக்கப்பட்டது. வெள்ளை இனவெறி அரசாங்கம் மண்டேலாவை தீவிரவாதி என்று கட்டம் கட்டியிருக்கிறது, ‘சர்வதேச சமூகத்தால்’ அது அங்கீகரிக்கவும் பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் அந்தத் தவறை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ளவாவது செய்திருக்கிறார்கள்.
இங்கே தமிழர்கள் மீண்டும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது போல் அமைதியாக வாழ ராஜபக்சே வழி வகுத்துக் கொடுக்க வேண்டும். இதற்கும் அவரை உலக நாடுகள் நிர்ப்பந்திக்க வேண்டும்.
என்கிறார் சாரு நிவேதிதா.

புலிகள் தீவிரவாத இயக்கம் என்று உலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கம் - அவர்கள் செய்த (அல்லது செய்ததாகச் சொல்லப்படும்) குற்றங்கள் அவர்கள் பிடிபட்டால் விசாரணைக்குட்படுத்தப்படும் - தற்போது முழுக்க அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அவர்களது அத்துமீறல்கள் நிச்சயம் ஆவணப்படுத்தப்படும். அதே குற்றங்களை இலங்கை அரசு செய்தால் (அல்லது செய்ததாகச் சொல்லப்படுவதை) அது குறித்தான விசாரணைகளுக்குக் கூட இடமில்லாதபோது, ராஜபக்ச வழிவகுத்துக் கொடுக்கவேண்டும் என்று கட்டுரையை முடிக்கிறார் சாரு நிவேதிதா. ஈசாப் செத்தான். தமிழ்-புலி-கொலை-சுதந்திரம்-அஹிம்சை-ராஜபக்ச-ஹிட்லர் என்று ஸ்டாக்கட்டோ எடிட்டிங்கில் உளறுகிறார். வட கொரியாவில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், கிம்-ஜாங்-இல் தனது நாட்டு சிறுபான்மையினரை ‘தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்று ஜெனீவா ஒப்பந்தங்களை மீறி கொத்துக்குண்டுகள் போட்டுக் கொன்றிருந்தால், அது கூட வேண்டாம், உளவுபார்த்தார்கள் என்று பிடித்து வைத்துள்ள இரு அமெரிக்க நிருபர்களைக் கொன்று போட்டால் ஐக்கிய நாடுகளின் தற்போதைய தலைவர் பங்கி மூன் என்ன செய்திருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஈழத்தில் சாகும் சிவிலியன்கள் குறித்து பங்கி மூனுக்கு என்ன கவலை இருக்க முடியும். உலக அரசியலுக்கு எந்தவிதத்திலும் உபயோகமற்ற ஒரு இனக்குழுவின் சிவிலியன்கள், அரசாங்கத்தின் ராணுவத் தாக்குதலில் செத்து மடிந்தால் அதுகுறித்த விசாரணைகள் நடக்கச் சாத்தியமில்லை, எதிர்காலத்தில் நடக்கும் என நம்பிக்கை வைக்கவும் முகாந்திரம் இல்லை, ஐ.நாவில் இலங்கையை ஆதரிப்பது செர்பியா போன்ற சிறுபான்மையினரைக் கொன்றொழிக்கும் நாடுகள் என்பது சாருவுக்குத் தெரிமல் இருக்காது. ஆனாலும் அவர் மிலோரட் பாவிச்சின் Lost love in Constantinopleல் ஆழ்ந்து போய் கொன்ஸ்ந்தந்திநோப்பிளில் இழந்த காதல் என்று இழவிலக்கியம் அறிமுகம் செய்யலாம். கொன்ஸ்தந்திநோப்பிளை எரித்தபோது நிகழும் (பொய்கள் எப்படி வரலாறுவழிக் கடத்தப்படுகின்றன என்பதைக் கலைநயத்தோடு கக்கும்) கதை என்று ஈழ நிலவரத்தோடு இணைத்து உம்பர்த்தோ ஈக்கோவின் பாதோலினோவை மேற்கோள் காட்டலாம். அப்பட்டமான இஸ்லாமிய எதிர்ப்பாளரான, இனவெறியரான இத்தாலியின் ஓரியானா ஃபல்லாச்சி (Oriana Fallaci) 9/11க்குப் பிறகு இத்தாலிய ஏடான Corriere della seraவில் மொத்த இஸ்லாமியருக்கும் எதிராகக் கக்கிய விஷத்துக்கு ‘எழுத்தாளரான’ உம்பர்த்தோ ஈக்கோ ஆற்றிய ஆக்கப்பூர்வமான எதிர்வினையை சாரு படித்துத் தெரிந்துகொள்ளலாம். சாரு நாளை அமெரிக்கா வந்தால், ஓரியானா ஃபல்லாச்சி போன்றவர்களை முன்வைக்கும் டேனியல் பைப்ஸ் போன்ற ‘அறிஞர்களை’ சந்தித்து ‘விரிவாக உரையாடி’ தனது அறிவையும் விருத்தி செய்துகொள்ளலாம். தமிழர்கள்/தமிழ்நாடு/ஈழம்/தமிழ் குறித்து இந்திய ஆங்கில ஊடகங்கள் கக்கும் விஷம் இதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல.
ஜெயமோகனை விட சாரு மேல் ஏன் இவ்வளவு ஆத்திரம்? சாரு நிவேதிதாவுடையது முட்டாள்தனம் - முட்டாள்களுக்குத் திட்டினால் பெரும்பாலான நேரங்களில் உறைக்கும், திருத்திக் கொள்வார்கள். ஜெயமோகன் போன்ற வறட்டுப்பிடிவாத காரியக்கோமாளிகளிடம் இது நடவாத காரியம் - முயற்சி செய்பவர்களுக்குப் பைத்தியம் பிடிப்பதுதான் மிச்சம். Hop-frog என்று எட்கர் ஆலன் போவின் ஒரு கதை உள்ளது. அதில் வருவது மாதிரியான விபரீதமான, குயுக்தியான காரியக்கோமாளி ஜெயமோகன் என்று தொடக்கத்திலிருந்து உள்ள எண்ணம் இப்போதுவரை மாறவில்லை. பிரசங்க அடிப்படையிலான ஓர்திசை நீரோட்டம் போல மேலோட்டமாகத் தோன்றினாலும், deflective rhetoric என்பதை இவ்வளவு திறமையுடன் பிரயோகிக்கத் தெரிந்த ஒரு நபரை தமிழ் கூறும் நல்லுலகம் இதுவரை கண்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.மேலேயுள்ள கதையிலாவது கோமாளிக்கு ஒரு நியாயம் உள்ளது - இந்த நிஜக் கதையில், ஜெயமோகன் தமிழ்க் கோமாளிகள் முகத்தில் தர்க்க மதுரசத்தை விசிறியடித்து, குரங்கு ஆடைகளையும் மாட்டிவிட்டு, கட்டிவைத்து தனது ஞானச்சுடரால் எரிக்கவும் செய்கிறார். எட்கர் ஆலன் போ கதைகள் பலவற்றில் ‘நீதிவயப்பட்ட’ முடிவுகள் இருக்காது - பெரும்பாலான கதைகள் குற்றம் நிகழ்த்துபவர்களைப்பற்றி விவரிப்பவை மட்டுமே - ‘குற்றம்’ என்ற நிகழ்வு முடிந்ததும் கதையும் முடிந்தது - ஒரு ஊர்ல ஒரு நரி, அதோட கதை சரி என்பது மாதிரி. தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் ஜெயமோகன் செய்துள்ள ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் தாண்டி, அவரது வீம்பும் முரட்டுப் பிடிவாதமும் விசிறியடித்திருக்கும் பெரும் குப்பையைப் பெருக்கி அள்ள பல காலம் பிடிக்கும் - எனது ஊகப்படி, சில தசாப்தங்கள் கழித்து தமிழ்ச் சூழலில் ஜெயமோகனின் இருப்பும் அவரது ‘குப்பைக் கருத்துக்களின்’ எதிர்காலமும் ஒரு எட்கர் ஆலன் போ கதை போலத்தான் முடியும். நிறுத்தி நிதானமாகச் செய்யப்படும் சேதம், ஒரு கட்டத்துக்குப் பின் சேதத்தின் வசீகரம் குறித்த உரையாடலைத் துவங்குவது போல. இது தவிர்க்க இயலாத ஒன்று.


தன் நிழலைப் பின்தொடரும் அப்பாவிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களாகத் தன் ‘பயணங்களை’ நிறுவுவதும், நிறுவலுக்குத் தேவையான பிரத்யேக தர்க்கங்களை உருவாக்கிக்கொள்வதும், தனது முரண்பாடுகளைத் தனது ‘தேடல்கள் வழியான தெளிவு’ அல்லது ‘தெளிவை நோக்கிய தேடல், பயணம்’ என்று சுண்ணாம்படிப்பதும் இவருக்குக் கை வந்த கலை. இதில் இவரது பேச்சு இப்படிப்பட்டது என்று மலினத்திலிருந்து வீரியத்தைப் பிரித்து பதவுரை அளிக்க ‘சூரியா’ போன்ற ‘ரசிகர்கள்’ வேறு. எல்லனையும் மல்லனையும் பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். மல்லன் குதி குதி என்று குதிக்கும் ஆஜானுபாகுவான ஆசாமி - என்ன, சூதானம் பத்தாது. எல்லன் ஒரு சூம்பையன் - சதையளவில் மட்டும். வயிறுநிறையத் தின்று தண்ணீரும் குடித்து வைக்கும் மல்லனின் மூத்திரப்பை நிறைய எப்போதும் சிறுநீர். தினமும் சிறைச்சுவரின் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே குறிவைத்து மூத்திரம் அடிப்பது மல்லனின் வாடிக்கை. எல்லன் பொறுமையாகக் காத்திருக்கிறான். மாதங்கள்/வருடங்கள் கழித்து சுவர் நொதுநொதுத்ததும் ஒரு நாள் அதில் ஒரு ஓட்டை போட்டுத் தப்பியோடுகிறான். மல்லனுக்கு பிறகுதான் உறைக்கிறது, அவனும் ஓட்டைக்குள் நுழைய முயல்கிறான் - கால் மட்டும் ஓட்டைக்குள் போகிறது, மாட்டிக்கொள்கிறது. தமிழர்கள் சுவர் முழுக்க மூத்திரமடிக்க மட்டும்தான் லாயக்கு என்பது தொடர்ந்து நிரூபணமாகி வரும் விஷயமென்பதால் இதற்கு மேலும் ஏதும் விளக்கத் தேவையில்லை. மல்லர்சூழ் உலகில் நழுவியோட ஓட்டைகளுக்கா பஞ்சம். ஒரு பத்தியாளராக இந்த விஷயத்தில் தன்முனைப்பு, சுயநிரூபணம் என்ற இரண்டு விஷயங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அஹிம்சை என்ற போர்வையில் ஜெயமோகன் கட்டவிழ்த்து விட்டுள்ள தர்க்கத்திலுள்ள வீம்பும் பிடிவாதமும், அதைத் தொடர்ந்த விமர்சனங்கள் குறித்தான நேரடியான பதிலாயன்றி அவரது வாதத்தை நிலைநிறுத்த தற்கால இந்தியத் தமிழர்களின் விட்டேற்றித்தனத்தைத் தொட்டுச்செல்வதாகப் பாவனைகாட்டி, அதற்குக் காரணமாக அவர்களின் பொருளாதார நிலையைக் கவசமாக முன்வைத்து, ஈழத்தில் குண்டுவீச்சில் சாகும் பொதுஜனங்களின் துயரத்தையும் தமிழ்நாட்டின் பிளாட்ஃபாரங்களில் வசிப்பவர்களது ஏழைமையையும் தனது ஆன்மீகத் தேடல் வழி தெருவில் அலைந்தபோது சோற்றுருண்டை தின்றதையும் கூச்சமின்றி ஒரே இணையில் வைத்து, தற்போதைய தேர்தல் முடிவுகளைக்கொண்டு ஈழத்தவர் இந்தியத் தமிழர்களை எடைபோடக்கூடாதென்று எழுதுவதை அவரது வலைத்தளத்தில் படித்து திக்பிரமை மட்டும்தான் மிஞ்சியது.

ஆந்திராவில் பணிபுரிந்த போது ஆற்காடு மாவட்டங்களிலிருந்து/தமிழ்நாட்டு வட மாவட்டங்களிலிருந்து சில தமிழர்கள் - குறிப்பாகப் பெண்கள் - வண்ணச் சாயம் அடித்த கோழிக்குஞ்சுகளை ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்த சித்தூர் மாவட்ட ஆந்திரக் கிராமங்களுக்குள் கொண்டு வந்து விற்பார்கள். வெவ்வேறு தருணங்களில் அவர்கள் தட்டுப்படும் போதெல்லாம் கால் கூடை அரைக் கூடை என்று குஞ்சுகளை வாங்கி கிராமத்துச் சிறுவர்களுக்குக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன் - அவர்களுக்கு வியாபாரமும் ஆயிற்று, இவர்களுக்கு விளையாட்டுச்சாமானும் ஆயிற்று, உதவி செய்தோமென்று நம் “அகத்தை நிரப்பிக்கொள்வதும்” ஆயிற்று. இதை வைத்து ‘பிழைப்புக்காக கோழிக்குஞ்சு விற்க ஆந்திரா வரை போகும் தமிழர்கள் தங்கள் பிழைப்பைப் பார்ப்பார்களா அல்லது ஈழப்பிரச்சினையைப் பார்ப்பார்களா’ என்று அவர்களை நான் முன்னிறுத்தினால் அதைவிடக் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் வேறேதும் இருக்க முடியுமா? இயலாதவன் வலியை மற்றொரு இயலாதவனை முன்வைத்து இயன்றவன் தப்பித்துக்கொள்ளும் உத்தி எப்படிப்பட்டது? இதையெல்லாம் ஜெயமோகன் தெரிந்து செய்கிறார் என்று தோன்றவில்லை - இதெல்லாம் அப்படியே தற்போக்கில் வருவதுதான் போல - தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்பது மாதிரி சட்டியில் இருப்பது அகப்பையில் வருகிறது, அவ்வளவுதான். இதுபோன்ற பிரக்ருதிகள் தமிழ்நாட்டில் அசாதாரணமான வெற்றி அடையும் வாய்ப்புள்ளவர்கள் - சமீபகாலமாகக் கருணாநிதியைக் கருணாநிதி என்று எழுதாமல் வாய்க்கு வாய் கருணாநிதி அவர்கள் கருணாநிதி அவர்கள் என்று எழுதும் ஜெயமோகன், எம்.ஜி.ஆர் சிவாஜி குறித்து எழுதியதற்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு தொடர்ந்து வசனம் எழுதும் இந்த சுயமரியாதைச் சுடர், நாளை ஈழப் பிரச்னையில் கருணாநிதி செய்தது ராஜதந்திரம் என்று எழுதி, அவரை சிலாகித்து இரண்டு வரி எழுதி, இன்னும் பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்து கருணாநிதியின் இலக்கியம் குறித்தான தனது பார்வைகளை ‘மறுபரிசீலனை’ செய்து, தமிழ்ப் பண்பாட்டுப்புலத்தில் அதுவும் தேவையான ஒன்றுதான் என்று ‘மறுவாசிப்பு’ செய்து பின்பு ஒரு மேடையில் தோன்றி என்று இருபது வருடங்களில் நடக்கத்தான் போகிறது (கருணாநிதி அதுவரை உயிருடன் இருக்கத்தான் செய்வார்).இந்த கழுவும் மீனில் நழுவும் போக்கு வலதுசாரிகளின் வெளிப்படையான வெறுப்பரசியலைவிட அபாயகரமானது. வலதுசாரிகளிடம் கவனமாக இருக்கவேண்டிய விஷயம் அவர்களது பிரச்சாரங்கள்/பரப்புரைகள் கூட அல்ல - அவர்களது புகார்களும் கழிவிரக்க நாடகங்களும் மட்டுமே. அமெரிக்க ஊடக வலதுசாரிகள் ரஷ் லிம்பா, டெப்பி ஷ்லுஸ்ஸெல், மைக்கேல் சாவேஜ் (பில் ஓ ரெய்லி, ஆன் கூல்டர் போன்ற ஃபாக்ஸ் தொலைக்காட்சி/பிற வலதுசாரிப் பண்டிதர்கள் இவர்களிடம் பிச்சை வாங்கவேண்டும்) போன்ற உதாரணபுருஷர்கள் கட்டவிழ்த்து விடும் ‘தர்க்க’ ஊற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல - சொல்லப்போனால் அதைவிடத் தளுக்காக முன்வைக்கப்படும் ‘தர்க்கம்’ ஜெயமோகனது - இவரது பிரசங்கங்களனைத்தும் “தற்போதைய சூழலின் அபத்தத்தை விலகி நின்று விளக்கமுயல்வதாக, நீண்டகாலத்துக்குப் பயனுடையதாக இருப்பதாக” வேஷங்கட்டியிருப்பது தற்போதைய அவரது இருப்பை/கருத்துதிர்ப்பைத் தொடர்ந்து முன்னகர்த்துவதற்கான பிரயத்தனங்களே தவிர வேறேதுமில்லை. உதாரணம் இது: நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒருபங்கு இதேபோன்ற உள்நாட்டுப்போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என பேசுவதில்லை. அந்த போர்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமான அந்த மனநிலையை, ஆயுதவெறியை, மீண்டும் நம் நாட்டு மக்கள் மனதில் ஊட்டிவளர்கக் முடியுமா என்றுதான் நம் அறிவுஜீவிகளில் ஒருசாரார் முயல்கிறார்கள். அவர்களே மானுடநேயம் பேசுபவர்களாகவும் இங்கே அறியப்படுகிறார்கள். இது போன்ற கருத்துதிர்ப்புக்கள் தமிழ் “பண்பாட்டுச்சூழலில்” ஒரு சீரிய கருத்துக்கோர்வையாக/தத்துவக்கோர்வையாகக் கண்டுகொள்ளப்படும் என்பதுதான் விபரீதம்.ஜெயமோகன் போலவே மற்றொரு அஹிம்சாவாதியான, தமிழரான, முன்னாள் அதிபரான அப்துல் கலாம் ஈழம் குறித்தோ, அங்கு நடக்கும் மனித உரிமை அத்துமீறல்கள் குறித்து வாயைத் திறந்ததாக ஊடகங்களில் எங்கேயும் படித்த நினைவில்லை. ஆனால், சில வருடங்களுக்கு முன் இந்தியா-பாகிஸ்தான் இடையில் பதட்டம் மூண்டும் போர் நிகழாமல் போனபோது அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயம் ஊடகங்களால் கொண்டாடப்பட்டது - “இந்தியா பாகிஸ்தான் இருவரிடமும் அணுகுண்டு இருந்ததால்தான் நேரடிப் போர் நிகழவில்லை” என்று. ஜெயமோகன் பார்வையில் அப்துல் கலாம் ஐயா சொன்னது மாதிரி ‘அணுகுண்டு வைத்திருந்து பிரயோகிக்காததும்’ ஒரு திருகப்பட்ட அஹிம்சையாகத்தான் இருக்கும். நமது பாரத மாதா 1947ல் சுதந்திரமடைந்தபோது கோவாவிலிருந்து போர்த்துகீசியர்கள் இன்னும் வெளியேறவில்லை - துக்கடா போர்த்துகல்லிலிருந்து முறுக்கிக்கொண்டிருந்த சாலஸாரை தட்டி வைத்து கோவாவை பாரத மாதாவின் இடுப்புடன் இணைக்க இந்தியா தனது படைகளை அனுப்பி வைத்தது அஹிம்சையின் அடிப்படையிலா? ஆம். ஏனெனில் படைகளை அனுப்பியது மட்டுமே இந்தியா செய்தது - போர் நிகழவில்லை! எனவே அதுவும் நமது பாரம்பரியப்படி அஹிம்சா அணுகுமுறை. கட்டையைத் தலைக்கும் மேல் ஓங்கினால் பரவாயில்லை, அடித்தால்தான் தவறு. அதுவும், நமது உடைமைகளைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் எவ்வளவு பெரிய கட்டையை வேண்டுமானாலும் ஓங்கலாம். கட்டை கீழிறங்கித் தலையைப் பிளந்துவிட்டாலும் பரவாயில்லை - கட்டையின் பாதையில் தலை இருந்தது, அதனால் கட்டையை மட்டும் முழுதாகக் குற்றம்சொல்ல முடியாது. தலை சுற்றுகிறதா? ஜெயமோகனைத் தொடர்ந்து படித்து வருபவர்களாக இருந்தால், அவர் இந்த மாதிரியான வாதத் திறமையோடு ஹெராக்ளிட்டஸின் நதியிலோ காவிய சோனாவிலோ தனது தர்க்கக் கௌபீனத்துடன் இறங்கும்போது நதிகள் தலைதெறிக்கக் கரைபுரண்டோடும், நாமும் ரசிப்போம். ‘செ கெபாரா’ பற்றி சாரு நிவேதிதா அப்படி எழுதினால், ஜெயமோகன் அமெரிக்க வலதுசாரிகளின் அதே பார்வையுடன், “நூறு பேர் போய் கைப்பற்றினார்கள், அது எப்படியோ ஃப்ளூக் அடித்து புரட்சியாகிவிட்டது” என்று எழுதியிருக்கிறார். இவர் ‘மதிக்கும்’ நாவல் கலை நிபுணர் உம்பர்த்தோ ஈக்கோ கீழைத்தத்துவத்தை/அறிவியலைப் பற்றியும் இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார் - தொடக்கத்தில் ஏதோ ஒன்றிரண்டு விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள் கிழக்கே இதிலென்ன பெரிய விஷயம் என்று. அதே கதியில், 1857 சிப்பாய்க் கலகத்தில் மரணித்தவர்களின் புத்திசுவாதீனத்தை நாழியில் அளந்து விலை நிர்ணயிப்பது ஜெயமோகனின் அடுத்த கருத்திலக்காக இருக்கவேண்டும். இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு சிப்பாய்க் கலகம் ஒரு பொறி என்றுள்ள வரலாற்றை மாற்றி, அது முஸ்லிம் மன்னரை மீண்டும் பீடத்திலமர்த்த சவுதி அரேபியாவிலிருந்து போன பெட்ரோ டாலர்களால் உருவான சதி, சிப்பாய்களுக்கு பாங் கொடுத்து கலகத்துக்குத் தூண்டி நமது பாரத பாரம்பரியத்தின் அஹிம்சா நெறியிலிருந்து தவற வைத்துவிட்டார்கள் - அதில் பிடிபட்டுச் செத்தவர்கள் குறித்தான மரியாதை அசலில் தேவையா இல்லையா என்பதை வரலாற்று மறுவாசிப்பு செய்யவேண்டுமென்று அடுத்து எழுதினால் கணக்குச் சரி. ஜெயமோகன் போன்ற ஒரு ‘பெருங்கலாச்சாரவாதிக்கு’, ‘தேசியவாதிக்கு’, கிட்டத்தட்ட எண்பது கோடி மக்கள் கொண்ட ‘பெரும்பான்மை’ மத்தியில் வாழும் ‘பெரும்பான்மை உறுப்பினர்’ ஒருவருக்கு, தனது வாழ்நாளில் போர் மட்டுமல்ல - தனது ‘அடையாளங்ஙள்’ மீதான கலாச்சார/உடல்ரீதியான/உள்ளரீதியான வன்முறை எதையும் சந்தித்திராத ஆளுக்கு காந்தியின் அஹிம்சை குறித்து சண்டப் பிரசண்டங்கள் செய்ய எந்தத் தயக்கமும் இல்லாததை நாம் அவரது கோணத்திலேயே புரிந்துகொள்ள முயலலாம். பி.ஜே.பியின் ‘இந்தியா ஒளிர்கிறது’ விளம்பரங்களின்போது காந்தியின் ‘தேவையென்றால் இந்தியா ஆயுதமும் எடுக்கலாம்’ என்னும் வாக்கியம், அதன் உள்ளடக்கத்திலிருந்து அகற்றப்பட்டு திரிக்கப்பட்டு இந்துத்துவக் குரங்குகளால் திசைதிருப்பப்பட்டதாக (implied) ‘அஹிம்சாவாத’ ‘ஈழ ஆதரவு’ ‘த ஹிந்து’வில் திரு. சி. ராம்மனோகர் ரெட்டி எழுதினார் - “நரேன் பாய்” குறித்து ஜாடை மாடையாகவும். காந்தியின் இந்தக் கட்டுரையில் இருந்து சில பகுதிகளை (முழுமையாக அல்ல) முன்பொரு தருணத்தில் குறிப்பிட்டிருந்தேன் - ராஜீவ் ஸ்ரீனிவாசன் போன்ற quasi-intellectual பிரக்ருதிகள் எழுதும், தமிழ்நாட்டைக்குறித்து எழுதும் நிருபர்கள்கூட சமகாலத் தமிழ்ப் பாரம்பரியப்படி “கணேஷ் நாடார்” என்று தோகை விரித்தாடும் மயில் போல பெயர் போட்டு எழுதும் ரிடிஃபிலும் கூட, பாரத மக்களால் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் தகவல் தொடர்புத் துறை எப்படி காந்திய வார்த்தைகளை ‘திரிக்கிறது’ என்று திலிப் டிசௌஸாவால் எழுதப்பட்டிருந்தது.

ஆக, நமது இந்திய அரசாங்கம் கூட காந்தியின் வார்த்தைகளைத் திரிக்கிறது. இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுத உதவி செய்கிறது (பிரணாப் முகர்ஜியின் அஹிம்சா வழி, வெறும் உளவு பார்க்கும் ஆயுதங்கள்தான் - உளவு பார்க்கும் ஆயுதங்களைப் பயன்படுத்திப் போடும் குண்டு இந்தியக் குண்டு அல்ல என்றாலும் என்பார் ஜெயமோகன்). இதைச் சொல்பவர்கள் பாரத தேஸத் துரோகிகள் என்பார் ஜெயமோகன். இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள் என்பார். காந்தியின் ‘அஹிம்சை’ வழிநடத்தியது பெரும்பான்மையினரை - எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான, பெரும் நிலப்பரப்பு முழுதும் விரிந்து பரந்திருந்த இந்தியத் துணைக்கண்டத்தவரை. ஆயுதப் போராட்டம் என்றாலும் அஹிம்சை என்றாலும் பிரிட்டிஷாரிடமிருந்து இந்திய விடுதலை நிகழ்ந்திருப்பது தவிர்க்கவியலாத ஒன்று - இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நொறுங்கிப் போயிருந்த ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளின் பிடி இந்தியா தொடங்கி அதன்பின் ஒவ்வொன்றாக தென்கிழக்கு ஆசிய, ஆஃப்ரிக்க நாடுகளில் தளரத் தொடங்கியிருந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்து, ஹிட்லர் மேற்கு ஐரோப்பாவை தன் ‘ஆயுதங்களால்’ துவம்சம் செய்யத் தொடங்கவில்லை எனில் பிரிட்டன், பிற காலனியாதிக்க நாடுகளின் பொருளாதாரம் போருக்குத் திசைதிரும்பாமல் அப்படியே இருந்திருக்கும், காந்தி தனது ‘அஹிம்சைப் போராட்டங்களை’த் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருந்திருக்க வேண்டியதுதான் - சாகும் வரை. ‘உலகப்போர்’ நடந்தபோது கூட, வங்காளத்திலிருந்து உணவுப்பொருட்கள் திசைதிருப்பப்பட்டு லட்சக்கணக்கில் ‘இந்தியர்கள்’ செத்த வங்காளப் பஞ்சத்தைக்கூட ‘அஹிம்சைப் போராட்டம்’ தவிர்த்திருக்க முடியும்தான்!!!!!!!!!!!!!!!!!!!! உலகத்தை ஹிட்லரின் பிடியிலிருந்து “விடுவிக்கப்” போராடிய இரண்டாம் உலகப் போரின் ‘நாயகர்களான’ சர்ச்சில் போன்றவர்களுக்கு காந்தி மேல் எவ்வளவு மரியாதை இருந்தது என்பது உலகறிந்த கதை. ஜெயமோகனின் (கு)தர்க்கப்படி நாமும் பார்த்தால் ஹிட்லர் தன் ஆயுதங்களால் ஐரோப்பாவை நொறுக்கப் போய்த்தான் இந்தியாவுக்கு ‘அஹிம்சை’ வழி வெற்றி கிடைத்தது. இரண்டாம் உலகப் போர் நடைபெறவில்லை எனில் ஆயுதபலத்தில் பல மடங்கு மேலோங்கியிருந்த ஐரோப்பியர்களுடன் போர் தொடுத்து இந்தியா வெற்றி பெற்றிருக்கச் சாத்தியம் இல்லை - இதில் விளைந்த தற்செயல் காந்தியின் அஹிம்சை. பெர்லின் சுவரை இடித்ததால் உடனே சோவியத் யூனியன் நொறுங்கிப்போனது என்று கருதுவது போன்ற பெரும் அபத்தம்தான் காந்தியின் அஹிம்சைக் கோட்பாடுகள் மட்டுமே (அல்லது முக்கியமாக) இந்திய விடுதலைக்குக் காரணம் என்பதும்.வருடக்கணக்கிலான ஆயுதப்பெருக்கம், தற்காப்பு யுத்திகள், திரைமறைவு அரசியல், உலக அரங்கில் அணிசேர்ப்பு என பன்முனைத் தாக்குதல்கள் மூலம் சோவியத் யூனியன் வீழ்ந்தது, கார்பசேவ் தற்போது நியூயார்க்கில் வசிக்கிறார். இந்திய விடுதலை என்பது காந்தியால் மட்டும் சாத்தியமானது என்பது போன்ற ஒரு பூசிமெழுகல் வேறேதுமிருக்க முடியாது. இது அனைத்தையும் முன்வைக்கும் ஜெயமோகனது ‘தர்க்கம்’ அசலில் வெகு சராசரியான இந்தியப் பெரும்பான்மையின் லௌகீகவாதம். ஈழத்தில் இலங்கை அரசாங்கம், புலிகள் இருவரின் ஆயுதங்களிலும் பலியான அன்றாட மக்களுக்கு இரு தரப்பு மேலும் புகார் இருக்கத்தான் செய்யும் - இதை நிறுத்தத் திராணியில்லாத இந்திய அரசாங்கம் மீதும் புகார் இருக்கத்தான் செய்யும். இதற்கும் கூட முன்கூட்டியே வாய்தா வாங்கி வைக்க வேண்டுமா.


ஹிட்லரை ஆதரித்த மக்களின் மனங்களை வென்றெடுக்காமல் அந்த அரசு மீது போர்தொடுத்தது ஐரோப்பிய உலகம். தாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதனால் அம்மக்கள் அவ்வரசுக்கு உறுதியான ஆதரவளித்து கூடவே நின்றார்கள். உலகப்போர் அத்தனை நீண்டமைக்கும் பேரழிவுகள் இரு தரப்பிலும் உருவானமைக்கும் காரணம் அதுவே.


ஆஷ்விட்ஸ், பெயௌஷெட்ஸ் (Belzec) நாஸி வதைமுகாம்களை/நினைவிடங்கள் சிலவற்றை நேரில் பார்த்திருக்கிறேன். இதுவரை இலங்கை போனதில்லை, ஊடகங்களில் படித்தவை சிலரிடம் உரையாடியது தவிர எதையும் நேரில் கண்டதில்லை - இதுதான் என்னைப் போன்றவர்களின் வாழ்வின் அவமானகரமான, குரூர நகைமுரண். அழிவுக்குப் பின்னான பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பார்ப்பது எப்படிப்பட்ட மனச்சிக்கலையளிக்கும் விஷயமென்பதை எளிதில் விளக்கிவிட முடியாது - கண்டதைப் பிறருக்கு விளக்கும் முனைப்பைவிட, கண்டது தன்னைநோக்கி தனக்குள் திரும்புகையில் நிகழும் சுயவதையைக் கையாள்வது சிக்கலான ஒன்று. எனவே எனது ‘கருத்தை’ச் சொல்லுமுன் எனது கருத்து எனக்கு எவ்வளவு அவமானகரமாக இருக்கிறது என்பது வேறு விஷயம் - யாரை நோக்கிக் கூறுகிறேனோ அவர்களுக்கு எவ்வளவு அவமானகரமாக இருக்கும் என்று முதலில் யோசித்துப் பார்க்கிறேன். தான் சொல்வது சரியாக இருக்கும் என்று அபாரத் தன்னம்பிக்கையுடன் மேற்கண்ட பொன்மொழியை உதிர்த்திருக்கும் ஜெயமோகனை உலகப்போர் காலத்து யூதர்களிடம் விட்டிருந்தால் உரித்து உப்புக்கண்டம் போட்டிருப்பார்கள். வரலாறு தொடர்ந்து முன் நகர்வது. வீம்புக்காக பதில்சொல்வதை விடுத்து, விமர்சனங்களை நியாயமாக எடுத்துக்கொண்டு அந்த அமெரிக்க வாசகர் குறிப்பிட்டதுபோல அசலில் உலகை ஜெயமோகன் ‘பார்க்க வேண்டும்’. உலகை எப்படிப் பார்ப்பது என்று பிறருக்கு விளக்கிப் பக்கம் பக்கமாக எழுதுபவருக்கு தனது பார்வை குறித்துக் கேள்வி கேட்டால் சுருக்கென்று கோபம் வந்துவிடுகிறது. நரேந்திர மோடி குஜராத்தை “தொழில்மயமாக்கியது” மாதிரி ஹிட்லரும்தான் ரோடு போட்டார், குளங்களை வெட்டினார், மரங்களை நட்டார், ஃபெர்தினாந்த் போர்ஷெவைச் சந்தித்து சாமானிய ஜெர்மானியர்கள் ஓட்டும் காரான வோக்ஸ்வேகனை உருவாக்கினார். அத்துடன் சேர்த்து யூதர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், ஊனம்/உடற்குறைபாடுள்ளவர்கள், ஐரோப்பிய ஜிப்ஸிகள் அனைவரையும் கொன்று போட்டார். நாஸி டாக்டர் ஜோஸஃப் மெங்கிளெ செய்த ‘சோதனைகளை’க்கூட அஹிம்சை முறையில் மெங்கிளெவின் நோயாளிகள் எதிர்த்திருக்க வேண்டும் போல. சினிமாவுக்கு தொடர்ந்து வசனம் எழுதிக் கிழித்த பின் இப்போதாவது வெள்ளைக்காரன் ஆன்மா இல்லாம படம் எடுக்குறான் என்று நொட்டை சொல்லாமல் ஜெயமோகன் படம் பார்ப்பார் என்று நினைக்கிறேன் - இஸ்த்வான் ஸாபோவின் ‘மெஃபிஸ்டோ’ பார்க்க வேண்டும் அவர். அதன் நாயகன் போல ஜெயமோகன் நாஸி ஆட்சிக்காலத்தில் கலைஞராக இருந்திருக்க வேண்டும். ஊத்தை சிவாஜி எம்ஜியார் ரசிகர்களின் மிரட்டல்களை தாக்குப்பிடிக்க முடியவில்லை, ஹிட்லரின் ஆன்மாவில் பேன்பார்த்து - ஜெர்மானியர்களின் மனங்களை வென்றெடுத்து - ஜெர்மானிய மனதுகளை அசைத்து விடுதலை கிடைக்க வேண்டுமாம். திரைப்படங்களில் பார்த்தது, ஏட்டுச் சுரைக்காயாக அவர் புத்தகங்களில் படித்தது தவிர துணையின்றித் தனியாக இந்த கொலைக்கூடங்களின் காற்றைத் தன் வாழ்வின் தருணங்களிலொன்றில் அவர் சுவாசிக்க நேரும்போது எடுக்கும் பித்தவாந்தியில் வரும் சில வார்த்தைகளாவது நேர்மையானதாக இருக்கிறதா பார்க்கலாம் - வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.


இன்று இந்தப் பதிவில் படித்(திருந்தால்)ததை நினைவு வைத்து “கண்ட கண்ட நாயும் எனது கலைத்திறனைப் பற்றி குற்றம் குறை சொல்லி எழுதுகிறது, இதுகள் சொன்ன ஆஷ்விட்ஸை நேரில் பார்த்தால் எனக்கு வாந்தி வரவேண்டுமா, அங்கே லாவண்டர் மணம் வீசியது என்று எழுதுகிறேன்” என்று எழுதுவாரென்று நினைக்கிறேன்!!! காஷ்மீரில் பண்டிட்டுகளை குண்டு போட்டுக் கொல்லும் ஜிகாதிகளிடமும் போய் அவர்கள் ஆன்மாவை சுத்திகரிக்க வழி இருக்கிறதா பார்க்கவேண்டும் ஜெயமோகன் - ஓரியானா ஃபல்லாச்சி சொன்னது போல ‘சுத்திகரிக்க முடியாத குட்டையான’ இஸ்லாமுக்கு மட்டும் இந்த அஹிம்சை அப்ரோச்சிலிருந்து விதிவிலக்கு - சரியா? தமிழ் எழுத்தாளர்களின், பொதுவாக இந்தியர்களின் பிரயாண வாய்ப்புக்கள் குறைவு - அது ஒரு விஷயமே அல்ல, தவறும் அல்ல. இவற்றை அணுகுவதற்குத் திறந்த மனம் மட்டும் தேவை - பிரயாணங்கள் கூட அல்ல - எதையும் பார்த்திராதவன் கூட ஜெயமோகன் போன்றவர்களைவிடத் திறந்த மனதுடையவனாக இருக்க முடியும். கொலையுண்டு இறந்த அனைத்து யூதர்களுக்கு எதிராகக்கூட நினைத்தால், தேவைப்பட்டால், வீம்புக்காக எத்தனை தர்க்கங்களை வேண்டுமானாலும் என்னாலும் உருவாக்கிக்கொள்ள முடியும். ஜேம்ஸ் பாண்ட் டேனியல் க்ரெய்கின் சமீபத்திய திரைப்படம் ‘Defiance’ன் அசல் கதை வேறு - யூதர்களை இதில் வெறுமனே விதந்தோதுகிறார்கள், அசலில் இதுவும் நடந்தது என செய்திகளில் காட்ட முடியும். என்னைத் தவிர்த்த விஷயங்களில் ‘எனது நிரூபணம் இது’ என்னும் உறுதி பெரும் அபத்தம். யூதர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சாமானிய ஐரோப்பியர்கள் கணக்கற்றவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் - அவர்கள் ஒரு இனக்குழு சார்ந்தவர்கள் அல்ல - அவர்களது வரலாறு நொறுங்கிச் சிதறிய ஒன்று. அவர்களுக்காவது தற்போதைய ஐரோப்பிய நாடுகள் வழி வரலாற்றை எழுத வழி கிடைக்கிறது. ஈழத்தவர்களின் வரலாறு இதைவிடக் கேவலமாகச் சிதறிக் கிடப்பது - ஐரோப்பாவின் யூதர்கள், அல்லது இஸ்லாமியப் பின்புலமுள்ள பாலஸ்தீனர் போலன்றி எதுவுமின்றிப் போயுள்ள இவர்கள் வாசிக்கும் மொழியில் இந்த எழுத்தாளப் பிரக்ருதிகள் தங்களது சிந்தனைக் கழிச்சல்களைக் கொட்டக்கூடாது என்று கூற எவருக்கும் உரிமையில்லை - ஆனால் கொட்டியுள்ளதை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் உள்ளது. இந்தியத் தமிழர்கள் இவர்களைப் படித்தாகவேண்டிய காரணங்களும் ஈழத்தவர் இவர்களைப் படித்தாகவேண்டிய காரணங்களும் நிச்சயம் வேறு வேறு என்றே நினைக்கிறேன்.~~ dystociaweblogs.us ~~