Friday, September 4, 2009

அமைப்பியல் வாதம்


(அமைப்பியல் - பின்-அமைப்பியல்)

இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியைத் தாண்டியும் மார்க்சியக் கொள்கைகள் அறிவியல், சமூகவியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் புத்தொளிப் பாய்ச்சிப் புதிய தெளிவையும் புரித¬லையும் அளித்து வந்தன. அறுபதுகளுக்குப் பின்னர் அமைப்பியல், பின்-அமைப்பியல் போன்ற தத்துவங்கள் தோன்றி வளர்ந்தன.

மார்க்சியத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்த்து விட்டதாக அமைப்பியல் உரிமைப் பாராட்டிக் கொள்கின்றது. சமூகத்தின் மேற்கட்டுமானம், பொருளாதார அடித்தளமானத்தைப் பிரதிபலிக்கின்றது என்பது மார்க்சியக் கோட்பாடு ஆகும். இதிலிருந்து மேற்கட்டுமானமாகிய இலக்கியம் போன்றவை தனித்து இயங்கவியலாது என்பது பெறப்படுகின்றது. ஆனால் கலை, பண்பாடு போன்ற மேற்கட்டுமானம் பொருளாதார உறவிலிருந்து தனித்து இயங்க வல்லது என்று அல்தூசர் என்ற அமைப்பியலறிஞர் கூறுகின்றார்.

அதுமட்டுமின்றி அடித்தளம் மேற்கட்டுமானம் என்பவற்றில் எந்த ஒன்றும் மையம் அல்லது குவிமையம் அல்லது சாராம்சம் எதையும் பெறமுடியாது என்று அவர் கூறுகின்றார். இதன் மூலம் அடித்தளம் மேற்கட்டுமானம் ஆகியவற்றை சாராம்சப்படுத்தும் மார்க்சியப் பார்வையை விமரிசனத்துக்குட் படுத்துகின்றார்.

ஒரு பொருளில் பல உறுப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவை பிரிக்க இயாலாதவாறு இணைந்திருக்கின்றன. ஒன்று மற்றொன்றை பாதித்து மாற்றி வளர்ப்பதாக உள்ளது. இந்த உறுப்புக்கள் முழுமை ஒன்றில் உயிர்ப்புடன் ஒன்றிணைந்து இருக்கின்றன. இந்த அமைப்பு அப்பொருளின் கட்டுமானத்தைக் குறிக்கின்றது. இதுதான் அமைப்பு குறித்து அமைப்பியல் தரும் விளக்கம் ஆகும்.

அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அந்த அமைப்பினைப் படைப்பு எனக் கொள்ளாமல் பனுவல் என அது கொள்கிறது. பனுவலுக்குள்ளேயே ஒரு கலை வடிவத்தின் அல்லது இலக்கியத்தின் அழகும் பொருளும் எல்லாமும் இருக்கின்றன; வெளியே அல்ல என்று அமைப்பியல் கூறுகின்றது.
படைப்பாளி மற்றும் படைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வழங்காமல் வாசகனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது அமைப்பியல். இது அமைப்பியலின் ஒரு முக்கிய கோட்பாடாகும்.

பனுவல் என்பது இயங்குதல் தன்மை கொண்ட பல பகுதிகள் கொண்டது. அந்தப் பகிதிகள் ஒரு முழுமையின் பகுதிகளே யன்றித் தனிமை யானவை அல்ல என்றும் அத்தகைய பகுதிகளை வாசகன் எவ்வாறு புரிந்து கொள்கிறான்; வாசகனுனுடைய புரிதல் தன்மைகள் பனுவலின் விசேடத் தன்மைகள் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்றும் அமைப்பியல் விளக்குகின்றது.

அமைப்பின் ஒரு பகுதியை அல்லது ஓர் உறுப்பை ஆராய்கின்ற போது அந்த ஒழுங்கிணைவுக்குள்ள அதன் உறவோடு ஆராய வேண்டும் என்பதை அமைப்பியல் வலியுறுத்துகின்றது.
இது தவிர, கதைப்பின்னல், இருநிலை எதிர்வு ஆகியன அமைப்பியலின் இதர சிறப்பான அம்சங்களாகும்.

அதாவது கதை அல்லது நிகழ்ச்சி வருணனையில் நிகழ்வுகளின் பண்புகள் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வகையான பண்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் அமைப்பு கட்டமைக்கப்படுகின்றது என்று லெவி ஸ்ட்ராஸ் என்ற அமைப்பியல் அறிஞர் கூறுகின்றார். அத்தகைய பண்புகளின் எதிர்நிலையான அம்சங்கள்தான் அமைப்பு கட்டமைக்கப்படுவதற்கு காரணமாக அமைகின்றன. உதாரண்மாக தொல் மானுடவியல் அடிப்படையில் பண்பு மற்றும் பண்பாடு என்பது ஒரு இருநிலை எதிர்வு ஆகும். இதை விவரித்தவர் லெவி ஸ்ட்ராஸ் ஆவர்.

மேலும், கதைப்பின்னல் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் கதைத்தன்மை உடையனவாக எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

பனுவலுக்கு வெளியே அழகும் செய்தியும் இல்லை; அதற்கு உள்ளேதான் இருக்கின்றது என்று அமைப்பியல் கூறுகின்றது; அதேபோல் ஒரு முறை வாசித்தவுடன் கிடைக்கிற பொருள் அதன் பொருள் அல்ல; மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது பொருள்களின் பல உண்மைகள் புலப்படுகின்றன என்றும் அந்தப் பனுவல் பல வாசிப்புத் தளங்களைக் கொண்டது என்றும் அந்த வாசிப்புத் தளங்கள் இன்னொரு இணை பனுவலைக் கட்டமைக்கின்றன என்றும் பனுவலின் உண்மை அது கட்டவிழ்க்கப்படுகிற போது வெளிப்படுகின்றது என்றும் பின்-அமைப்பியல் கூறுகின்றது.

அமைப்பியலின் வளர்ச்சியாகவும் அதன் பல்வேறு அம்சங்களை மறுப்பதாகவும் பின்-அமைப்பியல் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. இதற்கு வித்திட்டவர்கள் ரோலந் பார்த், டெர்ரிடா, மிக்கேல் பூக்கோ, லக்கான், ஜுலியஸ் கிறிஸ்தோவா மற்றும் பால் டிவேர் ஆகியோர் ஆவர்.

மார்க்சிய திறனாய்வுக்கு படைப்பு, படைப்பாளி, சமுகப் படிமாணங்கள் முக்கியமானவை ஆகும். அமைப்பியல் பனுவல், வாசகன் ஆகியவற்றை முதன்மைப் படுத்தியது. படைப்பிலிருந்து நகர்ந்து அதன் முக்கியத்துவம் பனுவல் எனும் கட்டுக்கோப்பான அமைப்பை என்று போலன் பார்த் என்ற பிரபல பிரஞ்சுத் திறனாய்வாளர் கூறுவார்.

இலக்கியம் என்பது வரையறைக்களுக்கு உட்பட்ட பொருள்களைக் கொண்டதாகும். அதாவது அது தன்னுள் முடிவு பெற்ற ஓர் அமைப்பு என்று கருதப்பட்டது. ஆனால் பன்முகமான தளங்களை நோக்கிப் பனுவலின் விளக்கம் பயணம் புரிகின்றது.
அமைப்பியல் என்பது ஒரு கலை வடிவம் அல்லது சிந்தனை வடிவத்தின் கட்டமைப்புப் பற்றிப் பேசுகின்றது. அமைப்பு என்பது தன்னளவில் முழுமையானது; அதன் அழகு, அதன் செய்தி எல்லாம் அமைப்புக்கு உள்ளேயே இருக்கின்றது; வெளியே அல்ல என்று சொல்லுகிறது. அமைப்பியல் படைப்பாளிக்கு முக்கியத்துவம் தருவதில்லை; வாசகனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

பின்-அமைப்பியல் பனுவல் என்ற கருத்து நிலையை முன்வைத்து அது எவ்வாறு தனக்குள் முடியாமல் அதனைச் சார்ந்து புறத்தே இருக்கின்ற வற்றோடும் உறவு கொண்டிருக்கின்றது என்று பேசுகின்றது. பனுவலின் உள்கட்டமைப்புக் கூறுகள் தமக்குள் பிணைந்தும் முரண்பட்டும் புதிய தளம் நோக்கி நகர்கின்றது என்றும் அது பேசுகின்றது. அதனுடைய சிறப்பான கருத்தியல்களில் பன்முக வாசிப்பு என்பதும் கட்டவிழ்ப்பு என்பதும் மிக முக்கியமானவை ஆகும்.

தமிழவன், அ.மார்க்ஸ் போன்றோர் அமைப்பியலைத் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தி யவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

நன்றி (philosophical debates )

No comments: