Friday, September 4, 2009

பின் நவீனத்துவம்


கலை, இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் பெரிதும் தாக்கம் பெற்றுவரும் பின்நவீனத்துவம், பின் அமைப்பியலுக்கு பிறகு உருவான கோட்பாடாகும். இது மார்க்சியத்தின் தொடர்ச்சியாக வந்த பிந்தைய சிந்தனையாகும். இப்போக்கானது, இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச் சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது என்றுக் கூறப்படுகின்றது.
நவீனத்துவத்தை மறுத்து பின் நவீனத்துவம் வளர்ந்தது எனலாம்.

நவீனத்துவம் வளர்த்துவிட்ட கருத்தாக்கங்களை எல்லாவற்றோடும் முரண்பட்டு மறுத்து விடுகின்றது எனப் புரிந்து கொள்ளலாம். இறைவன், தனிமனிதன், உணர்வு, அறிவு, சமூகம், மானுடவிடுதலை போன்ற நவீனத்துவ கருத்தாக்கங்களை மையமாகக் கொண்டு மொத்த உலக நோக்கும் கட்டியெழுப்பப் படுவதைப் பின்நவீனத்துவம் மறுதலிக்கிறது.


பின் நவீனத்துவம் வரலாற்றுத் தொடர்ச்சியை ஏற்காது. சமூக முழுமையை ஏற்காது. ஒருமையை ஏற்றுக் கொள்ளாது. துண்டு துண்டானவை, தொடர்பற்றவை, பன்முகத் தன்மை கொண்டவை போன்றவற்றை அங்கீகரிக்கும்.


பின் நவீனத்துவம் குறிப்பிட்ட எந்த ஒரு குறிப்பிட்ட தத்துவக் கருத்தாக்கத்தை மட்டும் எதிர்க்கவில்லை. சமூகம் இதுவரை கண்ட அனைத்து கருத்தாக்கங்களையும் மறுத்து விமர்சிக்கின்றது. அனைத்தையும் சந்தேக மனப்பான்மையைக் கொண்டு பார்க்கின்றது.
பூக்கோ, லக்கான், தெரிதா போன்ற பின் அமைப்பியல் அறிஞர்களும், லியோதார்த், பூதலியார்த், பார்த், ஜேம்சன், எட்வர்டு சயது போன்றோரும் பின் நவீனத்துவக் கருத்தை பிரபலபடுத்தியவர்களாவர்.


இவர்களில் பின் நவீனத்துவச் சிந்தனையின் ஆதாரமான தத்துவ, அரசியல் வரையறைகளை முன் வைத்தவராக லியோதார்த்தைக் குறிப்பிடுவார்கள். இவர் 1979-ல் பிரெஞ்சு மொழியிலும், 1984-ல் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளிவந்த அவரது ' பின் நவீனத்துவ நிலை ' என்ற நூல்தான் பின் நவீனத்துவம் குறித்த தத்துவ வரையறைகளை தெளிவுபடுத்தியது.


தத்துவங்கள் கூறுகின்ற உண்மைகள் மீதும் விஞ்ஞானம் கூறிவருகின்ற உண்மைகள் மீதும் தீவிர ஐயப்பாடுகளை எழுப்பியவர்தான் மைக்கேல் பூக்கோ என்ற பின் நவீனத்துவ அறிஞர் ஆவர். இவர் மனித மனங்களின் மீது படிந்துக் கிடக்கும் வரலாற்றுக் காலங்களின் கருத்தாக்கங்களின் தொகுப்பான கதையாடல் மூலம் மனிதர்களை எவ்வாறு நெறிப்படுத்தி யிருக்கின்றன என்பதனை அகழ்வு ஆய்வு செய்தார்.


பின் நவீனத்துவம் எழுப்பும் பிரச்சனைகள் ஒன்று, அறிவுக்கும் உண்மைக்கும் உள்ள உறவு பற்றியதாகும். பெரும்பாலும் எல்லா தத்துவங்களும் அறிவு என்பது உண்மையோடு நேரடியான உறவைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தி வந்துள்ளன. ஆனால், பின் நவீனத்துவம் அவ்வாறு கருதவில்லை. இதை மறுக்கின்றது.

இரண்டாவது, தனிமனித மையம் குறித்த பிரச்சனையாகும். தத்துவ வரலாறு முழுக்க தனிமனித மையம் என்ற கருத்தாக்கம் ஊடாடி வந்துள்ளதை அறியலாம். இதையும் பின் நவீனத்துவம் மறுப்பதைக் காணலாம்.
மூன்றாவது பிரச்சனை ஒட்டுமொத்தப்படுத்தல் என்ற கருத்தாக்கம் ஆகும். பின் நவீனத்துவம், பிரபஞ்ச முழுமைக்கும், சமூகம் முழுமைக்குமான தத்துவக் கருத்தாக்கங்களை கேள்விக்குள்ளாக்குகின்றது.


நான்காவது பிரச்சனை அறிவே அதிகாரம் என்பதாகும். சமூக வரலாற்றில் அறிவு உற்பத்தி ஏற்றதாழ்வான சமூக அமைப்பை நியாயப்படுத்துவதாகவும் அதிகாரத்தின் கருவியாகவும் செயல்பட்டு வந்திருக்கின்றது என்று பின் நவீனத்துவ அறிஞர் பூக்கோ கூறுவதைக் காணலாம். பின் நவீனத்துவம் பகுத்தறிவை ஏற்காது.


ஐந்தாவது அதிகாரம் பற்றிய பிரச்சனையாகும். அரசு போன்ற சுரண்டல் வடிவங்கள் மட்டுமின்றி குடும்பம் , கல்வி நிறுவனம், சமயம் , பிற சமூகக் கலாச்சார நிறுவனங்கள் அனைத்திலுமே அதிகாரம் செயல்படுவதாக பூக்கோ கூறுகின்றார். அறிவு எப்போதும் அதிகாரத்துடனே நெருக்கமாக இருக்கும் என்பது பின் நவீனத்துவத்தின் கூற்றாகும்.


பின் நவீனத்துவச் சிந்தனைகள், சமூகக் கலாச்சார வாழ்வில் வழக்கிலிருக்கும் அடக்குமுறையின் நுட்பமான வடிவங்களை அடையாளப்படுத்தவும் விமர்சிக்கவும் செய்கின்றது.

நவீனத்துவத்தை மறுத்து பின் நவீனத்துவம் வளர்ந்தது எனலாம். நவீனத்துவம் வளர்த்துவிட்ட கருத்தாக்கங்களை எல்லாவற்றோடும் முரண்பட்டு மறுத்து விடுகின்றது எனக் கண்டோம்.
வரலாறு, பண்பாடு, தேசிய அடையாளம் போன்ற பெருங்கதை யாடல்களை நவீனத்துவம் வளர்த்து விட்ட கருத்தாக்கங்களாகும். ஆனால் பின் நவீனத்துவம் இது போன்ற பெருங்கதையாடல்களை மறுத்துக் கூறி உள்ளூர் கதையாடல்களை முன்வைக்கின்றது. இந்த வகையில் மார்க்சியத்தையும் பெருங்கதையாடல்கள் வரிசையில் சேர்த்து விடுகின்றது.
அதுமட்டுமின்றி, அறிவியல், வரலாறு, தேசிய ஒற்றுமை போன்ற பெருங்கோட்பாடுகளை புறக்கணித்து உள்ளூர் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கின்றது. வரலாறானது உடைந்த துண்டு துண்டான நிகழ்வுகளின் ஒன்று சேர்க்கப்பட்ட கலவைதான் என அது கூறுகின்றது.


ஒருங்கிணைக்கப்பட்ட அறிவுக்குப் பதிலாக துண்டாடப் பட்ட புத்தியையும், அடையாள ஒற்றுமைக்குப் பதிலாக பல சிதறுண்ட அடையாளத்தையும், பின் நவீனத்துவம் முன் வைக்கின்றது.
உயர்ந்த, தாழ்ந்த பண்பாடுகள் எதிர்வு நிலையில் பாகுபட்டவையாக பார்ப்பதை மறுத்து உயர்ந்த, தாழ்ந்த பண்பாடுகளுக்கு இடையிலான பாகுபாடு மறைந்து போவதாக பின் நவீனத்துவம் கூறுகின்றது.


இவ்வாறு பின் நவீனத்துவத்தின் கூறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அடுத்ததாக பின் நவீனத்துவ கருத்தாக்கங்களை உருவாக்கிய அறிஞர்களையும் அவர்களது பங்களிப்புகளையும் பார்க்கலாம்.
சொற்களும் அவை பிறப்பிக்கின்ற அர்த்தங்களும் எப்போதும் நிரந்தரமாக காலா காலத்திற்கும் ஒரே அர்த்தத்தை கொண்டிருக்க முடியாது. மாறாக, முடிவில்லாத அர்த்தங்களை கொண்டவையாக இருக்கும். ஒரு சொல்லைப் படைத்த படைப்பாளி கொண்டிருக்கும் அர்த்தம் தற்காலிக ஒரு வெளிப்பாடாகும். அது பின் வாசிக்கின்ற ஒவ்வொருவரின் வாசிப்பிற்கேற்ப புதிய புதிய அர்த்தங்கள் அச்சொல்லில் இருந்து சுரந்துக் கொண்டே இருக்கும். ஒரு எழுத்தினுள் இரண்டு முறை ஒரே மாதிரி பயணிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் அது பல்வகைப்பட்ட அர்த்த வெளிப்பாடுகள் பிறந்துக்கொண்டே இருக்கும்.


ஒரு சொல்லை விளக்க வருகின்ற அச்சடிக்கப் பட்ட அகராதியனது அர்த்தச் சுரத்தலை நிறுத்திவிடும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. ஆனால் மொழிக்குள் சொற்களின் அர்த்தமானது, தொடர்ச்சியான மாற்றங்களைப் புதுப்பிக்கும் விளையாட்டை நிகழ்த்திக் கொண்டே யிருக்கின்றன. இதுதான் கட்டுடைத்தல் என்ற பின் நவீனத்துவக் கருத்தாக்கம் ஆகும்.


இவ்வாறாக நிலையான ஒற்றைத் தன்மைக்கு மாறாக முடிவுறாத பன்மைத் தன்மையைத் தான் பின் நவீனத்துவம் கோருகின்றது. இத்தகைய மொழி விளையாட்டை நிகழ்த்திய அல்ஜீரியா நாட்டை சேர்ந்த, பின் அமைப்பியல்வாதியும் பின் நவீனத்துவத்துவ அறிஞரும் ஆன தெரிதா ஆவார்.

முதலாளித்துவ உற்பத்தியையும் தொழில் நுட்பத்தையும் இணைத்ததாக பிற்கால முதலாளித்துவம் இருந்ததைத் தனது நூலில் லியோதார்த் குறிப்பிடுகிறார். முந்தைய முதலாளித்துவ உற்பத்தி முறையின் அதிகாரம் தொழிற்சாலையை மையப்படுத்தியதாக இருக்க, இன்றைய உற்பத்தி முறையின் அதிகாரம் தகவலை மையமாகக் கொண்டிருப்பதை அவர் முன்வைக்கின்றார்.


அடுத்ததாக பின் நவீனத்துவத்தை மார்க்சிய தர்க்கத்தின் வழியில் கோட்பாட்டு உருவாக்கம் செய்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.


பின் நவீனத்துவத்தை முதலாளியக் காலகட்டதின் ஒரு தருணமாக பிரெடெரிக் ஜேம்சன் போன்றவர்கள் வரையறுக்கிறார்கள். இவர் ஒரு அமெரிக்க மார்க்சியர். இவர் பின் நவீனத்துவத்தை மார்க்சிய தர்க்கத்தின் வழியில் கோட்பாட்டு உருவாக்கம் செய்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய "பின் நவீனத்துவம்: பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கம்" என்ற நூலில்தான் பின் நவீனத்துவத்தின் கூறுகளை விரிவான முறையில் விமர்ச்சித்துள்ளார்.


ஜேம்சனை தொடர்ந்து, பின் நவீனத்துவம் குறித்து கோட்பாட்டு உருவாக்கத்தில் ஈடுபட்டவர் டெர்ரி ஈகிள்டன் என்ற பிறிதொரு மார்க்சியராவார். இவர் தன் "பின் நவீனத்துவத்தின் பிரமைகள்" என்ற நூலில் மூலம் தனது விமரிசனத்தை முன் வைத்தார்.

கடந்த இருபது ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தைக் கோட்பாட்டு உருவாக்கம் செய்யும் முயற்சி மார்க்சியர்களிடையே நடைபெற்று வருகின்றது. இம்முயற்சியை மேற்கிலும் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் ஈடுபட்டு வருவதைக் காணயியலும்.


தமிழகத்திலும் கூட பின் நவீனத்துவக் கோட்பாடுகள் அரசியல், இலக்கியம் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம். அதேபோன்று பின் நவீனத்துவக் கோட்பாடுகளை விமரிசனம் செய்யும் போக்கும் தமிழக மார்க்சியர்கள் இடையே இருந்து வருகின்றது.


இத்தகைய விமரிசனப் போக்கை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் அணுகுமுறைகள் இரு வகைகளில் அமைகின்றன. ஒன்று, பின் நவீனத்துவத்தை முற்றிலும் எதிர்நிலையில் நின்று விமர்சிக்கிற நிலைபாடு. நிறுவனமயமான கட்சிகளைச் சேர்ந்த மரபு மார்க்சிய வாதிகள் இத்தகைய நிலைபாட்டைக் கொண்டிருக்கின்றனர்.


இரண்டாவது, முழுக்க ஏற்காமலும், நிராகரிக்காமலும் அணுகுகின்ற நிலைப்பாடு. நிறுவனமயமான கட்சிகளைச் சாராத மார்க்சிய அறிஞர்கள் பின் நவீனத்துவத்தை விமரிசன கண்ணோட்டத்தில் அணுகுவதோடு, மார்க்சியத்திற்கும் இதற்கும் நிலவும் பொதுவான அம்சங்களை இனங்கண்டு, அங்கீகரிக்கவும் செய்கின்றனர்.


நன்றி- ( philosophical debates )