Thursday, October 1, 2009

கலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக?


சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்து கொண்டு, "சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்' என்று பழி சுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.

கோயில்களைக் குற்றம் சொல்லி, அவற்றில் உள்ள விக்ரகங்களின் பாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த பாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு "அவைகள் அவசியம் இருக்க வேண்டும்' என்றும் "அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்' என்றும், "சாமி பக்திக்காகத் தாங்கள் கோயில்களைக் காப்பாற்றுவதில்லை' என்றும் "ஓவியக் கலை அறிவுக்காகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்றும் சொல்லுகின்றார்கள்.

நமது பண்டிதர்களின் ஓவியக் கலையும், காவியக் கலையும் போகின்ற போக்கைப் பார்த்தால், அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால், இந்தியக் கோயில் ஓவியமும் இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப முடியாத, மதிக்க முடியாத ஓவியங்கள் என்பதோடு, அவை மனிதத் தன்மையும் பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் என்று சொல்ல முடியாததான நிலையில் இருப்பதையும் காணலாம்.

எப்படியெனில், இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அரிது என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவைகளில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்றும் சொல்ல வேண்டும்.

சாதாரணமாக மனிதனும் மிருகமும் புணர்வதும், மிருக முகத்துடன் மனிதன் இருப்பதும், மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பட்சிகளின் மீது மக்கள் இருப்பதும், மக்கள் பறப்பதும்; 4 கைகளும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு முகங்களும்; சிறிய உருவத்தின் மீது பெரிய உருவங்கள் இருப்பதும், தாமரைப் பூவின் மீது ஒரு பெண் நிற்பதும், இன்னமும் இதைவிட எத்தனையோ பொருத்தமற்ற, சாத்தியமற்றதான உருவங்களே இன்று ஓவியமாகக் கருதப்படுகின்றன.

சாதாரணமாக, மேல் நாட்டு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா, உண்மைத் தோற்றமா என்று மருளும்படியாகவும், அவைகளுடைய சாயல் முதலியவைகளிலிருந்தே குணம், காலம், இடம், நடவடிக்கை முதலியவைகள் தெரிந்து கொள்ளும்படியாகவும், அவைகள் பிரத்தியட்சமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும், எவ்வளவோ அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச் சாதாரண தன்மையில் அறியும்படியாகவும், நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக் கொள்ளும்படியாகவும் இருப்பதைக் காணலாம்.

ஆகவே, அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், சித்திரங்களையும், புதுமைகளையும் விட்டு விட்டு அநாகரிகமும், காட்டுமிராண்டித்தனமுமான, மிருகப் பிராயமும் கொண்டதான உருவங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து, கீழே விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக் கொண்டு, "ஓவியக் கலைக்காக அக்கலையைக் காப்பாற்றுவதற்காக அவைகளிடம் இப்படிச் செய்கின்றோம்' என்றால், இது பகுத்தறிவும் யோக்கியக் குணமும் அடைந்த மனிதர் என்பவர்களின் செய்கையாகுமா பேச்சாகுமா என்று கேட்கின்றோம்.

இந்த இடத்தில் நாம் முக்கியமாய்க் குறிப்பிடுவது என்னவென்றால், நமது பண்டிதர்கள் என்பவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும், புத்தக வியாபாரத்திற்கும், வாழ்க்கை நிலைமைக்கும் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான காவியங்களும் ஓவியங்களுமல்லாமல் வேறுவகை ஒன்றில்லாமல் போனதால், அவர்கள் இத்தனை மோசமான பொய்யையும், புரட்டையும் வஞ்சகத்தையும் சொல்லிக் கொண்டு, இவைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

ஆகவே, இம்மாதிரி பாசமும் அநாகரிகமுமான காவியமும், ஓவியமும் அழிக்கப்பட வேண்டுமானால், முதலாவதாக நமது பண்டிதர்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு வாழ்க்கை நலத்திற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டியது, பகுத்தறிவையும் நாகரிகத்தையும் விரும்பும் பொதுமக்கள் கடமையேயாகும்.

'குடி அரசு' பெரியார் 26.4.1931

1 comment:

பரிமள ராசன் said...

வணக்கம் தோழர்,இணைய பழக்கம் அதிகம் இல்லாததினால் இந்த வழியாக தொடர்புக்கு வருகிறேன்,இந்த கட்டுரைக்கு மறுப்பல்ல இது ///தோழர் பரிமளா அவர்களே..
திராவிடன் என்பது இனக்குழுவாக தான் பார்க்கப்பட்டது dravidian is race அது நிலப்பரப்பை குறிப்பது அல்ல/// .திராவிடர்,திராவிட வித்தியாசம் அண்ணாதுரை சொல்லுகிறார் “திராவிட நாடு தனியாக வேண்டும் - தனி அரசாக வேண்டும்.” ( அண்ணா ‘இன்பத் திராவிடம்’. பக்.20)

தமிழகம், கன்னடம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் திராவிடக் கூட்டாட்சி: அவரவர் உரிமை, கலை, மொழி இவைகளில் கை வைக்கப்பட மாட்டாது; ஆங்காங்கே அந்தந்த வட்டார மொழிகள் பயிலப்படும். அகில உலகத் தொடர்பிற்கும் கூட்டாட்சி விவகாரங்களுக்கும் ஆங்கிலம் இருக்கும்”. ( மேலது, பக்.37)

“தமிழ்நாடு தமிழருக்குத்தான் - ஆந்திர நாடு ஆந்திரருக்குத் தான் கேரள நாடு கேரளருக்குத்தான் கர்நாடகம் கர்நாடகருக்கே இவையாவும் கூடிய திராவிட நாடு திராவிடருக்கே ஆரியருக்கல்ல! பனியாவுக்கல்ல! “ (மேலது, பக்.34)

“நாம் நல்ல நிலை அடைய வேண்டுமானால் இன்னின்ன இணைப்புகளிலிருந்து, ஆரியம், ஆங்கிலம், வடநாடு என்னும் பிணைப்புகளிலிருந்து, ஜெபமாலை, துப்பாக்கி, தராசு எனும் கருவிகளைக் கொண்டு நமது வளத்தைக் கருக்கும் தொடர்புகளிலிருந்து விடுபட வேண்டும்...” ( மேலது, பக்.23-24). இதுவே அண்ணாவின் திராவிடம் பற்றிய பார்வை. அண்ணா கூறினார்:

“இந்த மூல நோக்கத்தை ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறோம். ஏற்றுக் கொள்வதிலே இந்த நால்வருக்கும் நலமிருக்கிறது என்று நம்புகிறோம். அவர்கள் டில்லியுடன் இணைந்து இருப்பதை விட, கூட்டாட்சியாக நம்மோடு இருப்பது நல்லது என்று எண்ணுகிறோம். எடுத்துக் கூறும் அளவுக்கு நமக்கும் அவர்களுக்கும் பாத்தியதை உறவு, ஒரே இனம் என்ற உரிமை இருக்கிற காரணத்தால்.” (மேலது, பக்.24)

ஏன் திராவிட நாடு கோரிக்கையை ஏனைய திராவிடத்தார் ஏற்கவில்லை என்ற கேள்விக்கு அண்ணாவின் விளக்கம் இதுதான்:

“கேரளத்தார் சம்மதம் கிடைக்கவில்லை, இன்னும் கேட்காததால்; கன்னடத்தார் ஒப்புதல் வரவில்லை, அவர்களைக் காணாததால்; ஆந்திரர் ஆதரவு பெறவில்லை, அவர்களை நாம் அணுகாததால். கேட்டு மறுத்ததில்லை ; நாம் சொல்லி எதிர்த்த தில்லை. அப்படியே மறுப்பதாக வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் திராவிட நாடு எல்லை குறையுமே தவிர, பிரச்சினை மறைந்து விடாது.” (மேலது, பக்.56)

ஆனால் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையைச் சென்னை மாகாணத்தில் தமிழ் மாவட்டங்களைத் தாண்டி எவரும் ஏற்கவில்லை.

1938 முதல் 1949 வரை தந்தை பெரியாருடன் அண்ணா இருந்த போதும், பின்னர் 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை உருவாக்கித் தேர்தல் கட்சியாக வளர்த்தெடுத்த காலத்திலும், 1963இல் அதைக் கைவிடும் வரை திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை அண்ணா உயர்த்திப் பிடித்தார்.

தமிழ்த் தலைவர்கள் சிலர் ‘விடுதலை பெற்ற தமிழகம்’ அல்லது ‘இந்தியக் கூட்டாட்சிக்குள் தன்னுரிமை பெற்ற தமிழகம்’ அல்லது தமிழகமும் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளும் சேர்ந்து உருவாக்கப்படும் ‘தமிழப் பேரரசு’ ஆகிய இலக்குகளை வலியுறுத்திய காலத்திலும், அண்ணா திராவிட நாடு விடுதலை பேசினார். 1956க்கு முந்தைய சென்னை மாகாணத்தின் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் பேசப்படும் மாவட்டங்களில் திராவிட நாடு கோரிக்கையைப் பரப்ப எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமலே அண்ணா தொடர்ந்து திராவிட நாடு விடுதலை பற்றிப் பேசினார்..