Thursday, January 5, 2012

சால்வடார் டாலி- salvador Daliசாதாரண மனிதர்கள் உணர்ந்து வெளிப்படுத்துவதற்குச் சாத்தியமற்ற மனவெளி உணர்வுநிலைகளைச் செம்மைப் படுத்தி அவற்றுக்கான உருவம் அளித்து இயல் உலகில் உலவ விடும் சக்தி சிருஷ்டியாளனிடம் மட்டுமே இருக்கிறது. இத்தகைய சிருஷ்டியாளன் செயல்படும் கள எல்லைகளின் விஸ்தீரணம் நிர்ணயிக்க இயலாதது. சிருஷ்டிக்கான சக்தி தவிரவும் ஒரு நலிவு மனநிலை (மிககுறைந்த அளவே ஆயினும்) கலைஞனிடம் காணப்படுகிறது. கலைஞனிடம் இந்த அம்சம் இருப்பது அவனுடைய ஆக்கத்தின் வேர்கள் எவ்வளவு இன்றியமையாததோ அதே அளவுக்கு தவிர்க்க முடியாதது. கலைஞனின் சாதாரண வாழ்நிலைகளில் வெளிப்படும் நலிவின் கூறுகளைக் கவனிக்கும் பார்வையாளனுக்கு இவை மனநோய் போன்றோ அல்லது பைத்தியத்தின் சாயைகள் போன்றோ தோன்றும்.

நரம்புகளின் நலிவினால் (Neurosis)அவதியுறும் மன நோயாளிகளின் உணர்நிலைகள் அசாதாரணமான எல்லைகளைத் தொட்டுத் திரும்புகின்றன. இந்த மனோ நிலைகளையும் ஸர்ரியலிஸக் கலைஞர்கள் வற்புறுத்திய Unconscious States of mindஐயும் நாம் ஒப்புமைப்படுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் உண்டு. நரம்புகளின் நலிவினால் பாதிக்கப்பட்ட மனிதன் அந்த மனோநிலைகளை உணர்வதுடன் நிறுத்திக் கொள்கிறான். இத்தகைய நிலைகளை அவனே(Neurotic)உணர்ந்தானா என்று அவன் அறிந்து கொள்ளும் சாத்தியமும் இல்லை. சிருஷ்டியாளனிடமும் இதே போன்ற மனநலிவுக்கூறுகள் இருப்பினும் மிச்சமிருக்கிற அவனின் ஆரோக்கியமான பகுதிகள் நலிவின் கூறுகளை விடக்குறைவாய் இருந்தாலும் கட்டமைப்பான வெளிப்பாட்டுக்குத் தயார் செய்கின்றன. Schizophreniacs என்னும் மனநோயாளிகள் பலரிடம் இந்நிலை காணப்படினும் அவர்களின் செயல்கள் எவையும் கலை ஆவதில்லை. Van Goghஒரு Schizophreniac ஆக இருந்தான் என்றாலும் அவன் மிகச்சிறந்த இம்ப்ரஷனிஸ ஓவியக்கலைஞன். தன் சிருஷ்டியின் ஆரம்ப ஸ்தானங்களை அடையாளம் காணுவதிலும், அதனைத் தன் அடிப்படைக் கருப்பொருளாக்கி இயற்கை உலகத்திற்குச் சமமான உருவாக்கத்தைச் செய்து வெளிக்கொணர்வதிலும் பிற மனிதர்களை விடத் தனித்தன்மை கொண்டவன்.

கிரேக்கப் புராணிகத்தில் வரும் Phlioctetis என்ற கதாபாத்திரம் இங்கு நினைவு கூறும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. Phlioctetis இன் உடலில் ஏற்பட்ட காயத்தின் ஆறாத தன்மையாலும், துர்வாடையாலும் அவன் மற்ற கிரேக்க வீரர்களிடமிருந்து தனித்து வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால் கிரேக்கக் கடவுளால் அளிக்கப்பட்ட வில் ஒன்றை வைத்திருக்கும் இவனுடைய அம்பு குறி தவறாதது. இதனால் கிரேக்கர்களுக்கு இவன் தயவு தேவைப்படுகிறது. சாதாரண புராணிக நிகழ்ச்சி என்று சாதாரணப்படுத்திவிட முடியாத அளவுக்கு குறியீட்டுத்தன்மை பெற்றுள்ளது. படைப்பாளனின் மனநலிவினை நாம் Phlioctetis இன் ரணத்திற்குச் சமமாகக் கொண்டால் அவர்களின் சிருஷ்டி ஆற்றலை நாம் குறிதவறாத அம்புகளை எறியும் வில் எனக்கொள்ளலாம். இந்த அடிப்படையில் எழுதப்பட்ட, அமெரிக்க விமர்சகரான Edmund wilson இன் ‘Wound and the Bow’ என்ற கட்டுரை பல நவீன இலக்கியவாதிகளின் சிருஷ்டியின் பின்னணியை ஆராய்கிறது.

இந்த அடிப்படைக் கோணம் சால்வடார் டாலி என்ற ஓவியக் கலைஞனைப் புரிந்து கொள்ள உதவும். டாலி ஒருமுறை கூறினார்: “The difference between a madman and myself is I am not mad’’. டாலியை ஸர்ரியலிஸ விமர்சகர்களும், எதிர்ப்பாளர் களும் ‘‘நவீன ஓவியத்தின் கோமாளி இளவரசன்” என்று வர்ணித்தனர். மூளையின் மீதான கட்டுப்பாட்டினை இழந்தவர்கள், மட்டு மீறிய வலிமையைப் பிரயோகிப்பவர் களாக இருக்கலாம். ஆனால் இரவு பகல் என்ற வேறுபாடு பாராட்டாது வருடத்தின் ஏழு மாதங்களை ஓவியங்களைத் தீட்டுவதில் செலுத்த முடியுமா? டாலியால் மட்டுமே இது முடியும். அவரால் மட்டுமே மற்ற நேரங்களை அவருக்குப் பிடித்த பயணங்களிலும் களியாட்டங்களிலும் ஈடுபடுத்திக் கொள்ள முடியும். அவரால் மட்டுமே தான் வீட்டுத் தோட்டத்து மரத்தில் கட்டபட்டுள்ள நாற்காலிகளைக் காட்டி பேட்டியை அங்கு வைத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி பேட்டியாளரை திகைப்படையச் செய்ய இயலும்.

ஓவியத்தில் டாலி ஒரு பாராட்டத்தக்க மரபுவாதி. அதே சமயத்தில் மிகச் சிறந்த நவீனன். டாலிக்குப் பிடித்தவை முட்டை வடிவங்கள். “உருமாறும் முகம்” என்ற ஓவியம் இதற்கு ஒரு உதாரணம். தான் இரண்டு மாதங்கள் முன்பே பிறந்துவிட்டதாகக் கூறும் டாலி, தன் ‘‘சிந்திக்கும் வாழ்வை” முழுமையடையாத குழந்தையாக இருந்தபோதே (ஏழுமாதக் கருவின் நிலையிலேயே) அடைந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். அந்த வாழ்வை அவரால் கூர்மையாக நினைவு கூறவும் முடிகிறது: “It was warm, it was soft, it was silent, it was Paradise’’. அவர் பிறப்பிற்கு முன்பான ஒரு வாழ்வைப் பற்றிய சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டிருந்தார். அவர் வரைவது முட்டை வடிவங்கள். கட்டுவதும் முட்டை வடிவச் சிற்பங்கள். அவரது வாழும் அறையும் முட்டை வடிவிலானது. ‘‘நான் மீண்டும் பிறக்கிறேன்” என்ற அறிவித்தலுடன் இவ்வமைப்புகளிலிருந்து டாலி வெளிப்படுகிறார்.

greatmasturbதான் உண்ணப்பட்டு விடுவோம் என்னும் பயமும், பிரமையும் இளமைக்கால டாலியைப் பாதித்திருக்கின்றன. ‘The Great Masturbator’ என்ற ஓவியத்தில் வாய்க்குப் பதிலாக ஒரு பெரிய வெட்டுக்கிளியை வரைந்திருக்கிறார். ‘The Dismal Sport’ (1929) என்ற ஓவியத்தில் குனிந்த தலையுடன் கண் மூடிக்கொண்டிருக்கும் பெண்ணின் வாயிலும் ஒரு வெட்டுக்கிளி. ஓவியங்களுக்குத் துணையாகக் கவிதை எழுதும் போக்கும் டாலியிடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது:

While the membrance which covers his mouth completely

Toughens under the agony of the enormous locust.

மேற்குறிப்பிட்ட வரிகள் டாலி The Dismal Sport என்ற ஓவியத்திற்குத் துணையாக எழுதியவை.

1920க்களின் பிற்பகுதியில் டாலி வரைந்த Georgio de chirico வின் ஓவிய உலகுடன் ஆன தொடர்பைச் சொல்வதோடன்றி ஒரு விநோதமான ஒழுங்குணர்ச்சி கொண்டிருந்தன. இவ்வுலகை நிரப்பிய பொருள்களும், உயிர்களும் கைக்கு வந்த வகையில் வீசி எறியப்பட்டவை போலவும், நெடும் நிழல்கள் சமைந்தது போலவும் இருந்தன. Chiricoவின் மென்மையான மதிய ஒளி (உதாரணம் The Rose Tower (1913) வன்மை மிகுந்தது, வண்ணம் பல வண்ணங்களால் (Techni colour) ஆனது. அதிகம் சீராக்க வேண்டுமென்ற உத்தி இப்படங்களுக்கு ஒரு உயிரற்ற தன்மையை அளித்தன.

டாலி தன் நண்பர்கள், பகைவர்கள், தன் உரையைக் கேட்க வருபவர்கள் போன்ற சகலரையும் திகைப்பில் ஆழ்த்த வைத்திருக்கும் முரண்பாடுமிக்க வரையறைகள் மற்றும் கோட்பாடுகளில் ஒன்று: ‘‘ஓவியங்கள் புகைப்படங்களைப் போல இருக்க வேண்டும்” என்பதாகும். குறிப்பாக வண்ணப் புகைப்படங்கள் ‘‘கையினால் உருவாக்கப்பட்டது போல்”.

டாலியின் மிகச் சாதுர்யமான கண்டுபிடிப்புகளில் ஒன்று ‘‘மிருதுவான கடிகாரங்கள்”. இக்கோட்பாடு அவரின் பல ஓவியங்களிலும் சித்திரங்களிலும் தொடர்ச்சியான இழையாக வருவதைக் காண முடியும். ‘‘மிருதுவான வடிவங்கள்” (Soft Structures) பற்றிய கோட்பாட்டை விவரணை செய்யும் ஓவியங்களை உருவாக்கிய காலகட்டமே டாலிக்குப் பிரசித்தமானதாய் அமைந்தது. இதே காலத்தில்தான் டாலி ஸர்ரியலிஸ இயக்கத்துக்கு நல்ல விளம்பரகர்த்தா வாகவும் விளங்கினார்.


Perisistence of Memory (1931)என்ற ஓவியத்தின் இடது புறம் ஒரு சதுர மேடை; மேடையின் மீது ஒரு கடிகாரம்; மிருதுவாகி குழைவடையும் நிலையில் உள்ளது. ஆனால் எண்களும் முட்களும் சிதையாமல் காட்சி தருகின்றன; அதன் அருகில் உள்பாகங்கள் தெரியும் மற்றொரு கடிகாரம். மேடையின் கீழ் மிருதுவான நீட்சி; பெரும் தோல் போன்ற ஒரு பொருளின் மீது மற்றொரு குழைந்த கடிகாரம். இவைகளுக்கு அப்பால் இடது கோடியில் பரிமாணங்களுடன் ஒரு நீள் சதுரம். இந்த ஓவியத்தில் நல்ல தொலைவு காட்டப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் கோடியில் தெரியும் சலனமற்ற நீர்ப்பரப்பு. நீர்பரப்பினைத் தொட்டபடி வலது கோடியில் நீர் அரித்த குன்றின் ஒரு பகுதி.மேடையின் கோடியில் கான்வாஸின் நடுவில் இலைகளற்ற ஒரே ஒரு கிளை கொண்ட மரம். இக்கிளையின் மீதும் குழைந்த நிலையில் ஒரு கடிகாரம். இந்த ஓவியம் நமக்குள் விரித்திருக்கும் காலவெளியை மகா தீவிரத்துடன் நம்மை உணர வைக்கிறது.

peristancememThe Triangular Hourஎன்ற ஓவியத்தின் நிலப்பரப்பு நம்மை மீண்டும் Perisistence of Memory ஐ நினைவு கூறவைக்கும். ஆனால் இதில் சிற்பத்தன்மைகள் ஓங்கி நிற்கின்றன. குறுக்கு வாட்டில் கிடக்கும் விரிசல்கள் கொண்ட குன்று, பேப்பரில் வெட்டி வைத்ததுபோல் இருக்க இதன் நடுவில் ஒரு ஒழுங்கற்ற முக்கோணத் திறப்பு. இந்த நுழைவின் அப்பால் வானம் தெரிகிறது. நுழைவின் தலைப்பகுதியில் ஒரு மிருதுவான கடிகாரம். ஆனால் எண்களின் தெளிவு முந்தைய ஓவியத்தை விடக் குறைவானது. வலது கோடியில், மலை மீது ஒரு கிழவனின் மார்பளவுச் சிற்பம். சிற்பத்தின் தலை மீது ஒரு கல். இதற்கு நேர்கீழ், சலனமற்ற பச்சை நிற நீர்ப்பரப்பிலிருந்து கிளம்பும் சிதைந்த கல் தூண்மீது ஒரு கல் குறுக்கு வாட்டில் சுமத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் இறுதியில் டாலியின் ஓவியப்பாணி ஒரு சம்பிரதாயமான ஸர்ரியலிஸ பிரதிநிதித்துவத்திற்கு இட்டுச் சென்றது. வேறு காரணங்களுக்காக அன்றி ‘‘அசைவற்ற வாழ்வின் பிரதிச் சித்திரங்கள்” அவற்றிற்காகவே பாராட்டப்பட்டன. இது ஸர்ரியலிஸத்தை அடையாளம் காண விரும்பியவர்களுக்கு வசதியாக இருந்தது. மற்றபடி டாலியின் தனித்துவ படைப்பு சக்தியின் வறட்சி தொடங்கி விட்டது. இரண்டாம் உலகப் போருக்கு முன் அவரின் “Paranoic-Critical”உத்தியை வியாபார விளம்பரத்துறையிலும், மத சம்பந்தப்பட்ட சித்திரங்களிலும் பயன்படுத்தினார். அமெரிக்காவில் இருந்த போது ‘‘இதாலிய மறுமலர்ச்சியின்” உந்துதலால் கிறித்துவச் சித்திரங்கள் உருவாயின. 1954இல் முடிக்கப்பட்ட Crucifixion என்னும் தலைப்பிட்ட ஓவியம் Metropolitan Museum of Art (New York) கலைக்கூடத்தின் நுழைவு அரங்கில் இடம் பிடித்திருக்கிறது. 1955இல் The Last Supperஎன்னும் ஓவியத்தை வரைந்தார். விளம்பரம், மதம் இவ்விரண்டும் ஸர்ரியலிஸ உலகின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. இதுதான் கவிஞர் Andre Bretonடாலியை “Greedy Dollars”என்று கிண்டல் செய்வதற்குத் தூண்டியிருக்க வேண்டும்.

ஃபிராய்டின் பாதிப்புக்கு உள்ளான ஓவியர்களில் முக்கியமானவர் டாலி. ஃபிராய்டின் குறியீடுகள் இவர் ஓவியங்களில், அறியப்பட்டு, முனைந்து அறிமுகமாகின்றன. கனவுகளில் அதிகம் வரும் பாலுணர்வுக் குறியீடான பெண்களின் காலணியைத் தன் ஓவியங்களில் டாலி வரைகிறார். ஒரு பெண்ணின் ஷுவில் பால் நிறைந்த டம்ளர் நிற்பது போல் ஓவியம் தீட்டுகிறார். ஆனால் டாலியின் உலகில் காணப்படும் விநோதத்தன்மை(Fantasy), Hieronymus Boschஎன்ற ஓவியனுடையதைப் போல இயல்பெழுச்சியானதும் தன்வயப்பட்டதும் அல்ல. சொல்லபோனால் Boschதன் ஓவிய உலகின் குறியீடுகளை மனவியல் சொற்சேர்க்கைகளினாலோ, ஃபிராய்டின் குறியீடுகளினாலோ விளக்கி இருக்க முடியாது. எனினும் டாலியும், Bosch ம் தங்களின் விநோத உலகினைச் சிருஷ்டிக்க நனவிலி மனதினை (Unconscious)மூல ஆதாரமாகக் கொண்டனர்.

Max Ernst குறிப்பிட்டதைப் போல ஸர்ரியலிஸக் கலைஞர்களின் நோக்கம் நனவிலி மனதின் பிராந்தியங்களுக்கு வழி தேடுவதும், அதன் உட்பொருளை நனவு வாழ்வைப் போல சித்தரிப்பதும் அல்ல. நனவிலி மனதிலிருந்து பல அம்சங்களைச் சேகரம் செய்து ஒரு தனித்துவ விநோத உலகைச் சமைப்பதும் அல்ல.

‘‘மன உலக புற உலகங்களின் பிரிவுகளைனும, நனவு மனம் நனவற்ற மனம், உள் வெளி உலகங்களின் பிரிவுகள் யாவற்றை யும் உடைத்தெறிந்து அதிப் பிரத்யட்சமான ஒரு உலகைச் சிருஷ் டிப்பதே. இவ்வுலகில் செயலும் தியானமும் சந்தித்து பின்னிப் பிணைந்து முழுவாழ்வையும் ஆளுமைக் கொள்கின்றன.”

இப்படிப்பட்ட உலகைத்தைச் சிருஷ்டித்தவர்களில் டாலி நிச்சயமாக ஒரு Super Realist..

பிரம்மராஜன் தொகுப்பில் இருந்து...

2 comments:

Unknown said...

மிகச்சிறந்த பதிவு தோழர் யுவன்..
தொடந்து நீங்கள் வழங்கும் பதிவு
எங்களை ஆய்வு நோக்கிற்கு அழைத்துச் செல்கிறது..

Unknown said...
This comment has been removed by the author.