Thursday, December 8, 2011

நீதி கடை சரக்கா?


இந்திய நீதித்துறை தனது தரத்திலிருந்து தாழ்ந்துபோய்விடாமல் இருக்க வேண்டுமென்றால், ஜனநாயகம் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேற்கத்திய நீதிபதிகளைப் போல போலிமுடி, உடைகள் ஆகியவற்றுடனான தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, திறந்த புத்தகமாக நீதிபதிகள் இருக்க வேண்டும்.

நீதிபதி ஜெரோம் பிராங்க் இவ்வாறு எழுதினார். “ஜனநாயகத்தில், அரசின் எந்த ஒரு கிளையின் செயல்பாடுகளை மக்களுக்கு பரிச்சயமாக்குவது அறிவுபூர்வமற்றதாக எப்போதுமே இருக்காது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் தவிர்க்க முடியாமல் ஏற்படக் கூடிய தவறுகளை, ஒப்புக்கொள்ளாத மக்களை குழந்தைகள் போன்று நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதாகும். இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்க, இந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை மக்களுக்கு சொல்லுவதே சரியானதாக அமையும்“ என்று குறிப்பிட்டார்.

நீதித்துறை ஊழலால் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது என்று எந்தவித நம்பத்தகாத கொள்கைகளையும் கண்டுபிடிக்க அனுமதிக்கக்கூடாது. நீதிமன்றங்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், தவறுகளுக்கு பொறுப்பேற்பதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் தண்டிக்கும் அதிகாரமுள்ள ஆணையத்தின் வழிகாட்டுதலில் இவை இயங்க வேண்டும். நீதித்துறையின் புகழைக் குலைக்கும் வகையில் ஒரு நீதிபதி ஊழலில் ஈடுபட்டால் கூட அவரை வெளியேற்ற வேண்டும்.

தற்போது நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை என்னைப் பொறுத்தவரை அரசியல் சட்டரீதியாகத் தேவையற்றது. உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் சுயேட்சையான தன்மை வேண்டுமென்று 1998ல் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கூறியது. இதனடிப்படையில் இருப்பதில் மூத்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவே தேர்வை செய்ய வேண்டும் என்று முடிவானது. நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அமைச்சரவையிடமிருந்து பறிக்கப்பட்டு நீதிபதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது.

நீதிபதிகளைத் தேர்வு செய்வதற்கு நிபுணத்துவம் தேவை. இதில் மூத்த நீதிபதிகளாக இருக்கட்டும் அல்லது இளைய நீதிபதிகளாக இருக்கட்டும், அவர்களுக்கு போதிய பயிற்சி கிடையாது. சோசலிச-மதச்சார்பற்ற-ஜனநாயகக் கருத்துகளில் நம்பிக்கையற்றவர்களையும், வர்க்க ரீதியாக பாரபட்சம் காட்டக்கூடியவர்களையும் ஒருபோதும் நீதிபதிகளாக நியமிக்கக்கூடாது. நிர்வாகமும், சட்டமன்றங்களும் தங்கள் எல்லையைத் தாண்டும்போது நீதிபதிகள் அவர்களைத் திருத்துகின்றனர். ஆனால் நீதிபதிகள் தவறு செய்யும்போது அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் சட்ட ரீதியான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்காக தெளிவான சட்ட வழிகாட்டுதல்கள் இருக்க வேண்டும்.

சலுகைகளை மட்டுமே எதிர்நோக்கும் பூஷ்வா தொழிற்சங்கத்தைப் போல நீதித்துறை இயங்குகிறது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் 180 நாட்களும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் 210 நாட்களும் மட்டுமே வேலை செய்கின்றனர். வழக்குகள் தேங்கிப்போய் மலைபோல் குவிந்து கிடக்கிறது. ஆனால் நீண்ட விடுமுறைகளை ஒழிக்க நீதிமன்றங்கள் அக்கறை கொள்வதில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாலை நேரங்களிலும் வழக்குகளை விசாரிக்க சில நீதிபதிகள் தயாராக உள்ளனர் என்பதும் உண்மையே.

வழக்கை விசாரிக்க பல நாட்களை சில நீதிபதிகள் எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் எடுத்துக் கொண்டால் வழக்கே முடிந்துவிடும் என்ற நிலையில், சில நீதிபதிகள் ஒத்திவைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். காலந்தாழ்த்துதல் மற்றும் யோசிக்காமலேயே அதிவிரைவில் செயல்படுதல் ஆகிய நீதிபதிகளுக்கு இருக்கக்கூடாத செயல்பாடுகள் அவர்களை தொற்றிக் கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளோ அல்லது மேற்பார்வை செய்வதற்கான ஏற்பாடுகளோ இல்லை.

உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க முடியும் என்பதில் நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக்கணக்கில் தள்ளிப் போடும் வழக்கம் உள்ளது. சில சமயங்களில் தீர்ப்பே வராத நிலையும் ஏற்பட்டுள்ளது. இவற்றை தணிக்கை செய்வதற்கோ அல்லது பொறுப்பேற்றுக் கொள்ளச் செய்வதற்கோ எந்தவழிமுறையும் இல்லை. குறித்த நேரத்திற்குள் நீதிமன்றங்களே தங்கள் வேலைகளை செய்யாவிட்டால், நிர்வாகத்தின் பணிகளை குறித்த நேரத்திற்குள் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தால் எவ்வாறு கூற முடியும்?

தீர்ப்புகளை வழங்காமலேயே இருக்கும் நீதிபதிகள், அதற்கு பொறுப்பேற்காமல் இருப்பது மட்டுமல்ல, பதவி உயர்வும் பெற்று சென்று விடுகிறார்கள். இது குறித்தெல்லாம் தேர்வுக்குழு விசாரிக்காது. தேர்வு செய்யும் முறை வழக்கறிஞர்கள், மக்கள் மன்றங்கள் மற்றும் மக்களுக்கு தெரிந்து விடாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் குடிமகன்களிலிருந்து ஒருபடி மேலே தங்களை வைத்துக் கொள்ள, தங்களைப் பற்றிய விபரங்களை வெளியிடாமல் இருக்கும் உரிமையை நீதிபதிகள் கோருகிறார்கள். இரும்புத் திரை ஒன்றை விரித்துக் கொண்டு அமரவே அவர்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்றிருந்தாலும், நீதித்துறை கடமை தவறுவது மீதான கருத்துகளுக்கு வாய்ப்பூட்டு போடும் முயற்சியிலும் நீதிபதிகள் இறங்கிவிடுகிறார்கள்.

பேராசை பிடித்த காலத்தில், கலாச்சாரமும் வர்த்தகமயமாகியுள்ளது. சம்பள உயர்வு குறித்த தொழிலாளர்களின் கோரிக்கைகளெல்லாம் தேங்கிக்கிடக்கின்றன. பொருளாதாரம் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறது. ஏராளமானோர் வேலையின்மையை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சலுகைகளை பெருமளவில் அதிகப்படுத்த வேண்டும் என்று சில நீதிபதிகள் கோருகிறார்கள். இல்லாதவர்களின் எண்ணிக்கையும், மனித உரிமைகளை பல வகைகளில் இழந்தவர்களும் இந்தியாவில் அதிகம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இத்தகைய ஊழல்வாத செயல்களால், ஜனநாயகக் குடியரசில் சோசலிச ரீதியிலான நீதியை வழங்குவதிலிருந்து இவர்கள் தகுதியிழந்துவிடுகிறார்கள். பொறுப்பேற்றுக் கொள்ளாத சுதந்திரம் என்பதால் பல நீதிபதிகள் தங்கள் மனச்சாட்சியையே இழந்துவிட்டார்கள் என்ற உண்மை அப்படியே தொக்கி நிற்கிறது. சலுகைகளை மட்டுமே எதிர்பார்க்கக்கூடிய பூஷ்வா தொழிற்சங்கங்களைப் போல நடந்து கொள்வது இப்பிரச்சனைகளைத் தீர்த்து விடாது. நீதி வழங்கும் தரத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, முறையீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்து சமூக ரீதியிலான தீர்ப்பை வழங்க வேண்டும்.

நீதித்துறை என்பது மக்கள் கையில் இருக்கும் பெரும் கருவியாகும். ஒரு சில தலைமை நீதிபதிகள், அதை மக்கள் கண்களிலிருந்து மறைக்க முயல்வதால் வெறும் கூடுகளாக மாறிவிடாது. இந்திரா காந்தியின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு நான் தடைவிதித்தபோதும் சரி, அல்லது முழுமையான தடையை விதிக்க மறுத்தபோதும் சரி, அச்சத்தாலோ அல்லது சலுகைகளைப் பெறுவதற்காகவோ நான் சரணாகதி அடைந்துவிடவில்லை. எனது கடமையை நான் நிறைவேற்றினேன். ஆனால் அதற்குப்பிறகு அவசர நிலை என்ற பெரும் பேரழிவு ஏற்பட்டு, அனைத்து மனித உரிமைகள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை பறிக்கப்பட்டன. நான் அளித்த தீர்ப்பு மூன்று பேர் கொண்ட பெஞ்சால் மாற்றிய மைக்கப்பட்டது.

நிறைவாக, நீதிமன்றம் என்பது மறைந்து கொண்டு இயங்கும் கோழை அல்ல. வெளிப்படையான மற்றும் அச்சமின்றித் தனது கருத்துகளை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பாகும். ரகசியம் என்பது நீதித்துறையைப் பொறுத்தமட்டில் பொருத்தமில்லாத ஒன்றாகும். இல்லையென்றால் ஜனநாயகமே கேலிக்குள்ளாகும். ஏழைகள் ஒரு சர்வாதிகார ஆட்சியை எதிர்கொள்ள நேரிடும். மக்களின் சக்தியால் உருவாகியுள்ள நமது குடியரசில், இப்படி ஒரு நிலையை அனுமதிக்கக் கூடாது. இந்திய நீதித்துறைக்கு இன்னும் மக்களிடத்தில் உள்ள மதிப்பை குலைக்கக்கூடிய வகையில், உச்சநீதிமன்றத் தில் ஏழு ஆண்டுகள் எனது வாழ்க்கையைக் கழித்த நான் சொல்லிவிடக் கூடாது. நமது சமூகத்தில் இந்திய நீதித் துறைக்கு என்று உயர்ந்த இடம் உள்ளது.

நீதி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் என்று அனைத்து வகையான அம்சங்களையும் நிலைநிறுத்தும் வகையில் தீர்ப்புகளை வழங்கிட வேண்டும். நீதி வழங்குவது ஒன்றும் பல அடுக்குகளைக் கொண்ட பெரு வர்த்தகமோ அல்லது வணிகமயமாக்கலோ அல்ல. நாட்டின் ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் பெரும் நம்பிக்கையே நீதி வழங்குதலாகும்.

-வி.ஆர்.கிருஷ்ணய்யர்
நன்றி : ‘தி இந்து’ (பிப்.19)

No comments: