Monday, November 9, 2009

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !



அந்தந்த காலத்துக்குரிய பொது அபிலாசைகளைக் கண்டறியாத, கண்டபின் அதனை நிறைவு செய்யாத ஒரு தலைமைதனது லட்சியத்தில் வெற்றிகொண்ட ஒரு தலைமையாக இருக்கமுடியாது.ஆனால் இந்த "பொது" என்கிற விடயமானது கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்று. .பெரும்பான்மை அபிலாசைகளை நிறைவேற்றுதல். என்பது ஜனநாயகப் பண்பின் பிரகாரம் சரியானதாகவே பட்டாலும், அடிப்படை தர்மத்தை (ethics) நிறைவு செய்வதாகத்தான் அது இருக்குமென்றில்லை. சில பலமான கருத்துக்கள், நியாயமானதாகவும் சிறுபான்மையானதாகவும் கூட இருக்கமுடியும். எளிமையாக சொல்லப்போனால், நாம் இன்று நம்பி ஏற்றுக்கொண்டுள்ள அத்தனையும் உண்மையாகவும் நியாயமாகவும் தான் இருக்குமென்பதில்லை. அது அப்போதைய நேரத்தின் இன்பமூட்டுபவையாகவும், சுயகளிப்பூட்டுபவையாகவும் இருக்கும். மாறாக நாம் மறுக்கின்ற பல விடயங்கள் நமக்கு கசப்பானவையாகவும் உண்மையாகவும் இருக்க முடியும்.

இந்த இடத்தில் மீண்டும் பொது என்கிற விடயத்துக்கு வருவோம். பெரும்போக்காக (mainstream) இருக்கிற அனைத்தும் நிச்சயம் உண்மையாகவும், சரியாகவும்தான் இருக்கும் என்றில்லை. மாறாக சிறுபான்மை கருத்துக்களாக இருப்பதால் அது பிழையாகத்தான் இருக்குமென்றில்லை.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது என்பதை நாம் அனைவரும் உணர்வோம்.


ஒரு இனத்தின் சமூக கட்டமைப்பானது, வரலாற்று ரீதியில் பல மரபுகளையும், அந்த மரபோடிணைந்த பல்வேறு புனைவுக் கூறுகளையும், மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மாயைகள், புனைவுகள், திரிபுகள் என்பன கலாசார பண்பாட்டு படிமங்கள் மீது குந்திக்கொண்டு தான் இருக்கும். இது நமது தமிழ் மரபில் மட்டுமல்ல உலகின் பல இனங்களின் மரபிலும் காணக்கிடைக்கின்ற கூறுகள்.சமூக உருவாக்கமானது, பல கட்டங்களைத் தாண்டி சமூகமாற்றங்களை கால வளர்ச்சிக்கமைய எதிர்கொள்கிற பொழுது, இவற்றில் இருக்கின்ற பல்வேறு பிழையான கூறுகளைக்களைவதில் தான் அந்த சமூகத்தின் ஆரோக்கியமான, புரட்சிகர சமூக மாற்றத்தின் வெற்றி தங்கியிருக்கிறது.நாட்டில் நமது போராட்டமானது ஒரு தேசிய போராட்டம் என்கிற ரீதியில், தேசிய உணர்வையும், அதன் கூறுகளையும் பாதுகாப்பதிலேயே நமது தேசியவாதத்தை தக்கவைக்கலாம் என்கிற வாதத்தின் விளைவாக புரையோடிப்போயுள்ள பல பிழையான மரபுகளைத் தோளில் சுமந்தபடி நமது சமூகம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை உளச்சுத்தியுடன் ஒப்புக்கொள்வோம்.


நம்மை வழிநடத்தும் உண்மைகள் பல நமக்குக் கசப்பானவை, நம்மால் ஜீரணிக்க முடியாதவை, நம்மை மகிழ்வூட்டடாதவை. மாறாக நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பல பிழையான ஐதீகங்கள், மற்றும் புனைவுகள் நமக்கு களிப்பூட்டுபவையாக உள்ளன.கசப்பான உண்மைகளை விட்டுத் தப்பியோடுபவர்களாகவும், களிப்பூட்டும் பிழையான ஆதிக்க மரபுக்கூறுகளை தொடர்பவர்களாகவும் நாம் உள்ளோம். இதனை பண்பாட்டின் பேரால், கலாசாராத் தின் பேரால், தேசியத்தின் பேரால் நாம் தொடர்ந்து வருகிறோம் என்பதே யதார்த்தம்இந்த யதார்த்தத்தை உணராதவரை, இதன் மீது எமது தேடலை செய்யாதவரை, இதில் தேவையான மாற்றங்களை கொணடுவராதவரை, நமது உள்ளார்ந்த வளர்ச்சியில் மாற்றம் காணப் போவதில்தில்லை நாம். அது போல நமது அடுத்த சந்தியினரின் ஆரோக்கியமான வெற்றியையும் இது பாதிக்கச்செய்யும். இது நமது ஆரோக்கியமான சமூகமாற்றத்தில் வெற்றியையும் இறுதியில் ஒட்டுமொத்த பாதிப்பை ஏற்படுத்தும்.


(டென்மார்க்கிலிருந்து வெளிவரும் "இனி" )

2 comments:

Anonymous said...

சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு. பாரம்பரிய அடிப்படையில் , அறிவியல் மற்றும் நடைமுறை சாராத பல இயல்புகள் நம்மிடையே ஆழப்பதிந்து உள்ளன. எந்த ஒரு விசயத்தையும் நடுவுநிலையுடன், எதார்த்த உலகுடன் பார்த்து பழக்கபடவேண்டும். பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை சரியான முறையில் ஆய்வு செய்து உண்மையான கூறுகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். வரட்டுத்தனமான சம்பிரதாய சடங்கு அணுகுமுறைகளை தவிர்க்க வேண்டும்.

ஐரோப்பாவில் கடந்த நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மறுமலர்ச்சி போன்ற ஒன்று நம்மிடையேயும் நிகழ வேண்டும் என நினைக்கிறேன். மேலும் இது பற்றி இன்னும் எழுதுங்கள். உண்மை கசப்பானதாகத்தான் இருக்கும். ஆனால் உண்மையை புறம் தள்ளினால் வரும் காலத்தை நாம் தீர்மானிக்க முடியாது. கவர்ச்சியான , மூடத்தனமான பாரம்பரிய சிந்தனையில் இயங்கினால் நம்முடைய விதியை பிறர் தான் தீர்மானிப்பார்கள்.

இந்த காலத்தில் மிகவும் தேவையான ஒரு பார்வையை முன் வைத்து இருக்கிறீர்கள். நன்றி. தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு தலைப்புக்களில் எழுதுங்கள். சமூக அளவில் ஒரு சுய ஆராய்ச்சி தேவைபடுகிறது.

சிவா

ரமேஷ் said...

நல்லதொரு பார்வை, நம்மிடையே அறிவியல் கல்வியை கொண்டுவந்தாலே போதும் பெரும்பாலான சிக்கலான முடிச்சுகளை அவிழ்த்துவிடலாம்

ரமேஷ்
மேனிலை பொறியாளர்
நாகை