Tuesday, October 13, 2009

நேரலை நிகழ்ச்சி . சூப்பர் சாங்ஸ்

.
.
வயது வந்தவர்க்கு மட்டும். அதுவும் ஆண்களுக்கு மட்டும்.

ஹலோ .. ஹலோ மூன் ப்ளவர் சூப்பர் சாங்ஸ் நிகழ்ச்சியிலிருந்து பேசுறோம்ங்க .. ஹலோ

ஹலோ ..திவ்யா மேடம்களா ?

ஆமாங்க .. உங்க பேர் சொல்லுங்க.

எம் பேருங்களா மேடம் .. சுப்புரமணிங்க...

எங்கிருங்து பேசறிங்க ?

டெலிபோன் பூத்துல இருந்து மேடம்.

ஹஹஹா .. அதைக்கேட்கலீங்க சுப்புரமணி எந்த ஊருலிருந்து நீங்க பேசறீங்க ?

மொடக்குறிச்சில இருந்து பேசுறேன் மேடம்.

மொட்டக்குதிச்சியா ? எங்க இருக்கு ? எந்த மாவட்டம் ?

மொடக்குறிச்சிங்களா மேடம் .. ஈரோடு மாவட்டத்துல இருக்குங்க
.
சரி என்ன பாட்டு உங்களுக்கு வேணும் ?

ஏதாவது புதுப்படத்துல இருந்து புது சாங் போடுங்க மேடம்.

சரிங்க சுப்பிரமணி .. பாட்டை யார் யாருக்கு எல்லாம் டெடிகேட் பண்ணறீங்க ?

உங்களோட நிலா டீவிக்கும்,உங்களுக்கும் , உங்க ஆத்தாவுக்கும்.

ஓ! தேங்க் யூ சுப்பிரமணி.சரி எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

நானா மேடம் .. நான் அஞ்சாம் கிளாஸ் பாஸ் மேடம்.

சரி என்ன தொழில் பண்ணிட்டு இருக்கீங்க ?

செரைச்சுட்டு இருக்கேன் மேடம்.

புரியல எனக்கு .. என்ன தொழில் அது ?

பார்பர் மேடம் நானு.

ஓ! சரிங்க சுப்பிரமணி இந்த நிகழ்ச்சியில நேயர்களுக்கு ஒரு குட்டி ஜோக் சொல்லுங்களேன்.

சின்னதா சொன்னா போதுங்களா மேடம்.. ஒரு அப்பாவும் பொண்ணும் பாரின்ல இருந்து பிளைட்டில வந்து சென்னையில இறங்குனாங்க.வெளி நாட்டுல இருந்து ஏகப்பட்ட பொருட்களை வாங்கீட்டு வந்திருக்காங்க. எல்லாத்தையும் அங்கேயே புடுங்கீட்டு ஒரு சூட்கேசும் அதுல துணிமணிகளையும் மட்டும் போட்டு குடுத்து தாட்டி உட்டுட்டாங்க.பொண்ணும் அப்பாவும் வீடு வந்துட்டாங்க சோகமா !.பொண்ணு மட்டும் பாரின்ல வாங்கின டிவிடி பிளேயரை ஆன் பண்ணி பாட்டுக்கேட்டுச்சு. அப்பா மகள்கிட்ட எப்படிம்மா இதை மட்டும் அவிங்ககிட்ட காட்டாம மறைச்சு கொண்டுவந்தே ? அப்படீன்னூ கேட்டாரு. அதுக்கு பொண்ணு தன்னோட சக்கரையில மறைச்சு எடுத்துக்கொண்டுவந்தேனு சொன்னா, அதைக்கேட்ட அப்பா உங்க அம்மாவையும் கூட்டிட்டு போயிருந்தா 21 இன்ஞ் டிவியையே கொண்டுவந்திருப்பான்னார். அவ்ளோதானுங்க மேடம் ஜோக்கு .

இது ஜோக்கா ? ஆமா சக்கரைனு சொன்னிங்களே அது அஸ்க்காவா?சக்கரைனா என்ன சுப்பிரமணி ?.

அதுவா மேடம் .. நீங்க ஊரின் போறீங்களே அதுதான் !

(அதுக்கு அப்புறம் டீவிக்காரங்க ஆளைத்தேடி அலைஞ்சது இன்னொரு கதை)
நன்றி.... வா.மு.கோமு
.
.

Friday, October 9, 2009

குவார்ட்டர் + பிரியாணி+ கவர் =பத்திரிகையாளர்!

கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத் தூக்கி மனையில வைன்னானாம்...இது எங்க ஊரு பழமொழி.

அவனவன் திங்கறதுக்கு சோறு இல்லாம முகாம்ல சாகறான் கேரளக்காரன் முல்லைப் பெரியாறுல ஆப்பு வைக்குதுங்க. மீன் புடிக்கப் போறவன் கருவாடா திரும்பறான். வன்னி முகாம்ல என் அக்கா தங்கச்சிக சிங்கள பன்னிக் கூட்டத்துக்கிட்ட சிக்கி சின்னா பின்னமாகுது. தமிழ்நாட்டுல ஒரு கிலோ கத்திரிக்காய் 22 ரூவா விக்குது. அரிசி 42 ரூவா ஆயிடுச்சி. ஒரு ரூவா அரிசிய வாங்கித் தின்னா வேளைக்குப் பத்து ரூவாய்ய்க்கு வயித்து வலி மாத்திரை திங்க வேண்டியிருக்கு.

தினமலர் பரதேசிக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையாவே தெரியலையாம். எந்த சினிமா நடிகை ’தொழில்’ நடத்தறாங்கன்னு பட்டியல் போடுது. நடிகர் சங்கம் இதைக் கண்டிச்சு கூட்டம் போடுது. சின்னக் கலைவாணர்னு நம்மள மாதிரி நாலு இளிச்ச வாயங்க நம்பிக்கிட்டிருந்த தேவர் சாதி வெறி பிடிச்ச விவேக் அந்தக் கூட்டத்துல ’பத்திரிகைக்காரன்லாம் குவார்ட்டர் சாராயத்துக்கும் பிரியாணிக்கும் அலையறவனுக...பத்திரைகையில எழுதினவனோட அக்கா ஆத்தா போட்டோ குடுங்க...கிராபிக்ஸ் பண்ணி அவளுகளும் தே....ன்னு விளம்பரம் கொடுப்போம்’ ....இப்பிடியெல்லாம் காமெடி பண்ணியிருக்கு.

இப்ப பத்திரிக்கையாளரகள் (என கௌரவமாக தங்களை அழைத்துக்கொள்ளும் சதை புரோக்கர்கள்) ஆஹா...எங்க இனத்துக்குக் கேவலம்னு கிளம்பிட்டாய்ங்க.

நான் தெரியாமத்தான் கேக்கறேன்.விவேக் சொன்ன, குவார்ட்டர் + பிரியாணி விசயத்துல என்ன தவறு? கருத்து சொல்ற அளவுக்கு விவேக் பெரிய பருப்பா இல்லாம இருக்கலாம். ஆனா...இந்த சதை புரோக்கர்கள் குவார்ட்டர் + பிரியாணி கொடுத்தால் ‘ஐயோ...யார்கிட்ட என்ன கொடுக்கறீங்க...? நாங்கள்லாம் சுத்த நேர்மைக்குப் பொறந்தவங்க’ன்னு மறுக்கிற ஜாதியா?

இப்பல்லாம் ப்ரஸ் மீட் வச்சாலே டாஸ்மாக்குக்கும் தலப்பாக்கட்டு கடைக்கும் மொய் வச்சே தீர வேண்டியிருக்கே. இது போதாதுன்னு நம்ம துரைங்க கிளம்பும்போது சும்மா ஜெண்டிலா ‘ம்ம்ம்...பாத்துக்கலாம்...மேட்டர் வந்துரும்...அப்பறம்...அவ்ளோதானா?’ன்னு காசு புடுங்க பேசுற பேச்சு இருக்கே...யப்பா...அந்த நிமிசத்துலதான் சரஸ்வதி தேவியும் தர்ம தேவனும் நமக்கு தரிசனம் தருவாங்க.

நடிகைங்க உடம்பக் காட்டி காசு பாக்கராங்கதான். யார் இல்லன்னது? ஆனா அதுக்குப் பேரு விபசாரம்னா...அட ங்கொய்யால...நடிகைங்க தொப்புளையும் தொடையையும் கலர் கலரா போட்டு காசு சம்பாதிக்கிறியே...உன் தொழிலுக்கு என்னா பேரு...?
தலைல இருந்து கால் வரைக்கும் வாயாலவே பாட்டுலவே நிர்வாணமா எழுதி சம்பாரிக்கிறானே அந்த பொழப்புக்கு பேரு என்ன ?

மீடியா...!ப்ரஸ்...!நான்காம் தூண்!-நல்லா வாயில வருது.

இதுல ஒரு பெரிய வித்தியசம் இருக்கு. நடிகைங்க தங்களோட ஒடம்பக் காட்டி...மானம் மரியாதய விட்டுக் காசு சேக்குதுங்க...! இது நியாயம் இல்லதான். ஆனாலும் அவங்க ஒடம்பு அவங்க காட்ட்றாங்கன்னு ஒரு மொக்கையாவாவது நியாம் பேசிக்கலாம்.

ஆனா...இந்த சதை புரோக்கருங்க...அடுத்த பொம்பளைங்க ஒடம்பக் காட்டற படத்த ஓசியில வாங்கிப் போட்டு...பொழைக்குதுங்க. இது எப்படி இருக்கு?அதாவது...நடிகைங்க விபசாரம் செய்யறாங்கன்னா...பத்திரிகைக்காரதுங்கதான் அந்த நடிகைங்களுக்கு மாமா வேலை பாக்குதுங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒடம்ப விக்கற பொம்பளைங்களை விட...அந்த ஒடம்புக்கு புரோக்கர் வேலை பாக்கற மாமாக்கள்தான் கேவலமான பிறவிங்க.

ஆனா...இந்த புரோக்கருங்களுக்குத்தான் சமூகத்துல பெரிய மரியாத.
சரக்கடிச்சிட்டு பைக் ஓட்டும்போது போலீஸ் புடிச்சா...’சார் நான் ப்ரஸ் சார்...என்ன என்னையே புடிக்கிறீங்க...?’ன்னு கேக்கறது.
ரயில்ல டிக்கெட் பதிவு செய்யப் போனா...’சார்...நான் மீடியா பர்சன்...’ன்னு பந்தா பண்ணி சீட்டு வாங்கறது.

நாலு நடிகைங்க படங்களை போட்டு...’இவங்கெல்லாம் விபசாரம் பண்றாங்கன்னு’ செய்தி போட்டதுக்காக...தினமலர் பரதேசி மேல நடிகர் சங்கம் புகார் கொடுத்துச்சு. நியாயமா என்ன செஞ்சிருக்கணும்?
அவதூறு பரப்பினதுக்காக தினமலர் பொறுப்பாசிரியர் ரமேக்ஷ்சைத் தூக்கி உள்ளே போட்டிருக்கணும். ஆனா...லெனின்னு ஒரு உதவி ஆசிரியரைக் கைது பண்ணிச்சி நம்ம போலீசு.

போறாளாம் பொன்னாத்தா...எம்மேல வந்து ஏறாத்தாங்கற கதையா...இந்த விசயத்துல இரு உதவி ஆசிரியர் என்ன செய்ய முடியும்?சட்டப்படியும் நியாயப்படியும் பொறுப்பாசிரியரைத்தானே கைது பண்ணணும்?ரமேக்ஷ் மேல கை வைக்கக் கருணாநிதிக்கு அவ்ளோ அச்சமா?

சரி...லெனினைக் கைது செஞ்சாச்சு.

பத்திரிகையாளர்கள்னு சொல்லிக்கிட்டிருக்கிற பல இதுகள்...கடந்த ரெண்டு நாளா தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்திக்கிட்டிருக்குக.லெனினைக் கைது செஞ்சது தப்பாம். அப்ப...? அவனுக எழுதினது மட்டும் ரைட்டா...?கேட்டா...இதெல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கையாம்!அரசின் அடக்குமுறையாம்!

ஆஹா...ஆஹா...இதுகளுக்குத்தான் கருத்துச் சுதந்திரத்து மேல என்னா அக்கறை...?
மரியாத கெட்ட பத்திரிகை உலக மாமாக்களே...

திசைநாயகம்னு ஒரு பத்திரிகையாளர் பேரைக் கேள்விப்பட்டிருக்கீகளா..?சிங்கள அரசின் போர் வெறிக் கொள்கையைக் கண்டிச்சு எழுதினதுக்காக...ராஜபக்சேவால கைது செய்யப்பட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிங்கம் போல் உள்ளே இருப்பவர்!

அவர் பேசினது கருத்து!அதுக்கு சுதந்திரம் இல்லங்கறது அடக்குமுறை!இன்னும் சொல்லப் போனா...அவர் மனுசன்!

நீங்கள்லாம் ஒட்டுண்னிங்க...! ஆட்சியில இருக்கறவங்க...அதிகாரத்துல இருக்கரவங்க...போலீசுக்காரங்க கூட சேர்ந்துக்கிட்டு பீறாய்ஞ்சு...காசு சேத்துக்கிட்டு ஒடம்பு வளர்க்குற ஒட்டுண்ணிங்க!
நீங்க மொதல்ல அரசாங்கத்தை எதிர்க்கத் துப்பு இல்லாதவங்க.

அட...அவ்வளவு ஏன்....?
எந்தப் பத்திரிகை ஆபீஸ்ல பத்திரிகையாளருங்க ‘ஒண்ணா’ சேர்ந்து சங்கம் வைச்சிருகீங்க?கட்ட வண்டி இழுக்கறவ தொழிலாளி, ஆட்டோ ஓட்டுறவங்க, மூட்ட தூக்கறவங்க கூட சங்கம் வச்சிதான் போராடறாங்க.நீங்க பேப்பர் கிழிய குமுறிக் குமுறி எழுதறீங்களே...உங்களுக்குன்னு ஒரு ஆபீசுல கூட சங்கம் வச்சுக்க வக்கில்லையே...ஏன்னு சொல்லவா?

நீங்கல்லாம் கடைஞ்செடுத்த சுயநலமிங்க...எல்லாத்துக்கும் மேல...நீங்கள்லாம் முதுகெலும்பு இல்லாத கோழைங்க! உங்களால பத்துப் பேரோட ஒத்துப் போக முடியாது. உங்களால உங்க முதலாளிங்ககிட்ட ஒரே ஒரு வார்த்தை எதிர்த்துப் பேச முடியாது!

அட...விபசாரம் பண்ற பொம்பளைங்க கூட ’பாலியல் தொழிலாளிகள்’ பேர் போட்டு சங்கம் வச்சிருக்காங்க...!
ஆனா...நீங்க...ஊர் ஒலகத்துல இருக்கிற உரிமைப் பிரச்சினைங்களையெல்லாம் எழுதுவீங்க. உங்க ஆபீசுல அடிமையா பம்முவீங்க!

இந்த லட்சணத்துல இருந்துக்கிட்டு ’பத்திரிகையாளர்கள் சங்கம்’னு ஒண்ணை ஆபீசுக்கு வெளில வச்சிருக்கீங்களே. யாரை ஏமாத்த?
ஏன்யா...ஒரு மன்னார் அன் கம்பெனியில வேலை பாக்க்குறவன் மன்னார் அன் கம்பெனி யூனியன்ல இருப்பானா...? இல்ல...தனியாப் போயி ’பல கம்பெனி பரதேசிகள் சங்கம்’னு ஒண்ணு ஆரம்பிச்சு அதுல இருப்பானா...?
பதில் சொல்லுங்க ’உரிமைக் காவலர்களே..’
இந்த நாட்டுல,,,போலீசு, பத்திரிகைக்காரதுக...இந்த ரெண்டு பேருக்கும் சங்கம் வச்சிக்கிற உரிமை இல்ல.

போலீசும் நீங்களும் சம்பாதிக்கிற விதமும் ஒண்ணுதானே!
சங்கத்தைப் பத்தி ஏன் கேக்கறேன்னா...உங்களுக்குன்னு ஒரு சங்கம் இருந்தா...லெனின் கைது செய்யப்பட்ட அடுத்த நிமிசமே...தினமலர் ஆபீசுல வேலை நிறுத்தம் செஞ்சி...’பொறுப்பாசிரியர் செஞ்ச தப்புக்கு...உதவி ஆசிரியர் பலியாகணுமா?ன்னு கோசம் போட்டிருக்கலாமே!
அதானே முறை?

அட...எக்ஸ்போர்ட் கம்பெனியில பனியன் நூல் பிரிஞ்சிருக்குன்னு கட்டரை சஸ்பெண்ட் பண்ணினா...தொழிலாளிங்கல்லாம் வாசலுக்குப் போயி...’சூப்பர்வைசர் என்ன புடுங்க்கிட்டா இருந்தான்...அவனை சஸ்பெண்ட் பண்ணுடா’ன்னு இந்நேரம் ஸ்ட்ரைக் பண்ணியிருப்பாங்க!

ஆனா...உங்களுக்கு அந்த துப்பில்லை! ஏன்னா நீங்கள்லாம் தினமும் வீட்லேருந்து கிளம்பும்போதே மானத்தை கக்கூஸ்லயும் மரியாதைய செருப்பு ஸ்டாண்டிலயும் வச்சுட்டுத்தான் ஆபீஸ் போறீங்க!

ஆக மொத்ததுல...சினிமா, அரசியல், கட்டப் பஞ்சாயத்து...ன்னு மாமா வேலை பார்த்துப் பொழைக்கற ஜென்மமா வாழற உங்களுக்கு...எந்த நடிகை என்ன ‘தொழில்’ செஞ்சா என்னா...?இதுதான் கேள்வி.
இதோட சில கொசுறுக் கேள்விங்களும் இருக்கு.

1. எந்தெந்த நடிகருங்க (ஹீரோக்கள்) விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு...இதே மாதிரி போட்டோவோட செய்தி போட முடியுமா?
2. எந்தெந்த தலைவருங்க விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?
3. எந்தெந்த பத்திரிகை ‘அதிபர்கள்’ விபசாரம் பண்ற நடிகைங்ககிட்ட ‘போய்’ட்டு வர்றாங்கன்னு போட்டோவோட செய்தி போட முடியுமா?இந்தக் கேள்விக்கெல்லாம் உங்களால பதில் சொல்ல முடியாதுன்னு எனக்குத் தெரியும்.

கடைசியா...இந்தக் கேள்வியையும் கேட்டுடறேன்.
மரியா மக்தலீனா..ங்கற பொண்ணு விபசாரம் செய்யுதுன்னு ஊரே திரண்டு அடிச்சப்ப...ஏசு சொன்ன வாசகம் இது:

‘உங்களில் எவரொருவர் கள்ளமில்லாதவரோ...அவர் இந்தப் பெண் மீது கல் எறியலாம்!’

இப்ப சொல்லுங்க...உங்களில் எவர் கள்ளமில்லாதவர்?

நன்றி :- உளறுவாயன் aka சேட்டைக்காரன் aka பட்டிக்காட்டான்

Thursday, October 1, 2009

கலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக?


சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்து கொண்டு, "சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்' என்று பழி சுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.

கோயில்களைக் குற்றம் சொல்லி, அவற்றில் உள்ள விக்ரகங்களின் பாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த பாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு "அவைகள் அவசியம் இருக்க வேண்டும்' என்றும் "அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்' என்றும், "சாமி பக்திக்காகத் தாங்கள் கோயில்களைக் காப்பாற்றுவதில்லை' என்றும் "ஓவியக் கலை அறிவுக்காகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்றும் சொல்லுகின்றார்கள்.

நமது பண்டிதர்களின் ஓவியக் கலையும், காவியக் கலையும் போகின்ற போக்கைப் பார்த்தால், அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால், இந்தியக் கோயில் ஓவியமும் இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப முடியாத, மதிக்க முடியாத ஓவியங்கள் என்பதோடு, அவை மனிதத் தன்மையும் பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் என்று சொல்ல முடியாததான நிலையில் இருப்பதையும் காணலாம்.

எப்படியெனில், இந்திய ஓவியம் என்பது இந்து மத சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அரிது என்றே சொல்ல வேண்டும். அது மாத்திரமல்லாமல், அவைகளில் இயற்கைக்கு முரண்பட்டவையே 100க்கு 99 ஓவியங்கள் என்றும் சொல்ல வேண்டும்.

சாதாரணமாக மனிதனும் மிருகமும் புணர்வதும், மிருக முகத்துடன் மனிதன் இருப்பதும், மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பட்சிகளின் மீது மக்கள் இருப்பதும், மக்கள் பறப்பதும்; 4 கைகளும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு முகங்களும்; சிறிய உருவத்தின் மீது பெரிய உருவங்கள் இருப்பதும், தாமரைப் பூவின் மீது ஒரு பெண் நிற்பதும், இன்னமும் இதைவிட எத்தனையோ பொருத்தமற்ற, சாத்தியமற்றதான உருவங்களே இன்று ஓவியமாகக் கருதப்படுகின்றன.

சாதாரணமாக, மேல் நாட்டு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா, உண்மைத் தோற்றமா என்று மருளும்படியாகவும், அவைகளுடைய சாயல் முதலியவைகளிலிருந்தே குணம், காலம், இடம், நடவடிக்கை முதலியவைகள் தெரிந்து கொள்ளும்படியாகவும், அவைகள் பிரத்தியட்சமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும், எவ்வளவோ அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச் சாதாரண தன்மையில் அறியும்படியாகவும், நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக் கொள்ளும்படியாகவும் இருப்பதைக் காணலாம்.

ஆகவே, அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், சித்திரங்களையும், புதுமைகளையும் விட்டு விட்டு அநாகரிகமும், காட்டுமிராண்டித்தனமுமான, மிருகப் பிராயமும் கொண்டதான உருவங்களை வைத்துக் கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து, கீழே விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக் கொண்டு, "ஓவியக் கலைக்காக அக்கலையைக் காப்பாற்றுவதற்காக அவைகளிடம் இப்படிச் செய்கின்றோம்' என்றால், இது பகுத்தறிவும் யோக்கியக் குணமும் அடைந்த மனிதர் என்பவர்களின் செய்கையாகுமா பேச்சாகுமா என்று கேட்கின்றோம்.

இந்த இடத்தில் நாம் முக்கியமாய்க் குறிப்பிடுவது என்னவென்றால், நமது பண்டிதர்கள் என்பவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும், புத்தக வியாபாரத்திற்கும், வாழ்க்கை நிலைமைக்கும் இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான காவியங்களும் ஓவியங்களுமல்லாமல் வேறுவகை ஒன்றில்லாமல் போனதால், அவர்கள் இத்தனை மோசமான பொய்யையும், புரட்டையும் வஞ்சகத்தையும் சொல்லிக் கொண்டு, இவைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

ஆகவே, இம்மாதிரி பாசமும் அநாகரிகமுமான காவியமும், ஓவியமும் அழிக்கப்பட வேண்டுமானால், முதலாவதாக நமது பண்டிதர்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு வாழ்க்கை நலத்திற்கு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டியது, பகுத்தறிவையும் நாகரிகத்தையும் விரும்பும் பொதுமக்கள் கடமையேயாகும்.

'குடி அரசு' பெரியார் 26.4.1931

தமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும் - பெரியார்


எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம்மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துகளைப் பொறுத்துத்தான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துகளைக் கொண்டுதான் பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட, அறிவைக்கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணம் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கு எவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக் கொள்ளப்படுவதற்கு, எழுத்துகள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி ‘தமிழ்'தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது, ‘தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தேன்.

அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக?

தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும் விடத் தமிழ் நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் - மற்ற வேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு, மேலும் மேலும் நன்மையடைவோம் எ‎ன்பதோடு, நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்பு கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள் கேடுபயக்கும் கருத்துகள் நம்மிடையே புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான்.

வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்றமொழி தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல.

நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். "ஜாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தை இல்லையே! ஆதலால், நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன்.

இதேபோல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்; சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்.தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. ‏இந்நிலைக்கு முக்கிய காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழ், சைவமொழி ஆக்கப்பட்டதால்தான் சைவத்திற்காக வேண்டி வடமொழியும், வடமொழிக் கலைகளும் அதிகமாக தமிழ் நாட்டில் புகத் தொடங்கின.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று, ஒரு நியூட்டன் தோன்றமுடியவில்லை; ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க, சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது மேன்மைக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றதும் நம் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டக்கூடியதும், நம் இழிவைப் போக்கக் கூடியதுமான எம்மொழியிலிருந்தும் நம் மொழிக்கு ஆக்கம் தரக்கூடியதும், அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக் கொள்ளலாம். எம்மொழித் தொடர்பிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடவே கூடாது. தமிழ் ஒன்றுதான் இன்றுவரைக்கும் வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறது.
வேற்றுமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று மேனாட்டு மொழி வல்லுனர்களே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

'மொழி - எழுத்து' நூலிலிருந்து

மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள்


பொருளா சிந்தனையா என்ற கேள்வி தத்துவ துறையின் மிக அடிப்படையான பிரச்சினையாகும். அதாவது பொருளுக்கும் சிந்தனைக்கும் உள்ள உறவுதான் இன்றுவரை முதன்மையான விசயமாக இருக்கின்றது. வாழ்நிலை சிந்தனையைத் தீர்மானிக்கின்றதா? சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கின்றதா? இந்த கேள்விகளுக்கு விடைத் தேடமுற்படும் போதுதான் சிந்தனையின் ஒரு பகுதியான கலை இலக்கிய துறைக்கான கோட்பாடுகள் உருவாகின்றன.

வாழ்நிலை சிந்தனையைத் தீர்மானிக்கின்றது. சிந்தனை வாழ்நிலையைப் பிரதிலிபலிக்கின்றது என்பது மார்க்சியக் கோட்பாடு ஆகும்.இந்தத் தத்துவ‌ கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கீழ்கண்ட இலக்கிய கோட்பாடுகள் தோன்றின.

1. அடித்தள மேற்கட்டுமான உறவு

2. பிரதிபலிப்புக் கோட்பாடு

3. சோசலிச எதார்த்தவாதம்

அடித்தள மேற்கட்டுமான உறவுஅடித்தளம் என்பது சமூக, பொருளாதார வாழ்வைக் குறிக்கும். மேற்கட்டுமானம் என்பது அரசியல், கலை இலக்கியம், தத்துவம் போன்ற சிந்தனை வாழ்வைக் குறிக்கும். மேற்கண்ட மார்க்சிய தத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகும்போது அடிக்கட்டுமானம்தான் மேற்கட்டுமானத்தைத் தீர்மானிக்கின்றது என்ற மார்க்சிய இலக்கியக் கோட்பாடு உருவானது. ஆக பொருளாதார வாழ்வுதான் கலை இலக்கியம் போன்ற சிந்தனை வாழ்வைத் தீர்மானிக்கின்றது என்ற முடிவு எட்டப்படுகின்றது.இது ஒரு முழுமையான கோட்பாடாக புரிந்துக்கொள்ளக் கூடாது என‌ மார்க்சும் எங்கெல்சும் அறிவுறுத்தியுள்ளனர். அதாவது சமுதாய யதார்த்தம்தான் கலை இலக்கியப் போக்கைத் தீர்மானிக்கும் என்ற ஒற்றைப் பரிணாமத்தில் புரிந்துக் கொள்வது எந்திர தனமான புரிதலுக்கு இட்டுச் செல்லும்.

கலை இலக்கியத்திற்கும் சமுதாய யதார்த்த‌திற்கும் உள்ள உறவை இயங்கியல் ரீதியில் புரிந்துக் கொள்ளப்படவேண்டும். சமுதாய யதார்த்தம்தான் கலை இலக்கியப் போக்கைத் தீர்மானிக்கும் என்று கராறான பார்வையில் புரிந்துக் கொண்டால் சிந்தனையின் பாத்திரத்தைக் குறைத்து மதிப்பிடும் தவறிழைக்க நேரிடும். சமுதாய யதார்த்தத்தின் மீதான கலை இலக்கியத்தின் செல்வாக்கு குறிப்பிடத் தக்கதாகும். சில சமயங்களில் சிந்தனை வாழ்நிலையைத் தீர்மானிக்கின்ற பாத்திரத்தை வகிக்கும் என்பதை மறுத்தலாகாது.இதைத்தான் ஏங்கல்சு கீழ்கண்டவாறு கூறினார்."வரலாற்று பொருள்முதல் வாதக் கருத்தின்படி, வரலாற்றிலே இறுதியான நிர்ணயிக்கும் அம்சம் யதார்த்த வாழ்க்கையின் உற்பத்தியும் பெருக்கமும்தான். இதற்கு மேல் நானோ அல்லது மார்க்சோ என்றும் உறுதி கூறியதில்லை. எனவே பொருளாதார அம்சம் மட்டுமே நிர்ணயிக்கும் அம்சமென எவரேனும் இதனைத் திரித்து கூறுவாரேயானால் அவர் அந்தச் சித்தாந்தத்தையே ஒரு அர்த்தமற்ற அபத்தமான சொல்லாட்சியாக மாற்றி விடுகிறார்

"இது குறித்து மாவோவின் கருத்தைப் பார்ப்போம். "சில நிலைமைகளில் உற்பத்தி உறவுகள், சித்தாந்தம், மேற்கட்டுமானம் ஆகியன தங்கள் தரப்பில் பிரதானமான, நிர்ணயகரமான பங்கை ஆற்றுகின்றன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்"பொருளாதார வாழ்வு எவ்வாறு கலை இலக்கியம் போன்ற சிந்தனை வாழ்வைத் தீர்மானிக்கின்றதோ அதே போன்று சில நிலைமைகளில் கலை இலக்கிய சிந்தனை, பொருளாதார வாழ்வைத் தீர்மானிப்பதாகவும் இருக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.பிரதிபலித்தல் கோட்பாடுசமுதாயத்தில் நிலவுகின்ற வர்க்கமுரண்பாடுகளையும் போராட்டங்களையும் கலை இலக்கியத்தில் பிரதிபலிக்கின்றது என்ற கோட்பாடு மார்க்சியத்தில் பிரதிபலித்தல் கோட்பாடு என்றழைக்க‌ப்படுகின்றது.

வர்க்க உணர்வுகளை கலைஇலக்கியம் பிரதிபலிப்பதைக் காணலாம். சமூக நிலைமைகளைப் பிரதிபலிப்பதோடு தனது பணி முடிந்துவிடவில்லை. மாறாக, சமூகத்தை மாற்றி அமைக்கும் நோக்கிலும் மார்க்சிய இலக்கிய கோட்பாடு செயலாற்ற இயலும் என்று பிரதிபலித்தல் கோட்பாடு வலியுறுத்தப்படுகின்றது.

பிரதிபலித்தல் கோட்பாடு இரு வகைப்படும்.

1), இருப்பதை அப்படியே பிரதிபலித்தல்;

2), இருப்பதற்கு எதிர்வினை ஆற்றுதல்.

இவ்வாறு பிரதிபலிப்பு என்பதை இருவகைப் பொருள்களையும் உள்ளடக்கி லெனின் பயன்படுத்துகின்றார்.சோசலிச எதார்த்தவாதம்யதார்த்தவாதம் என்பது உள்ளதை உள்ளவாறே சொல்வதாகும். விமரிசன யதார்த்தவாதம் என்பது முதலாளித்துவச் சூழலை விமர்சனம் செய்வது, முதலாளித்துவ சமுதாய முரண்களை வெளிப்படுத்துவது ஆகும். சோசலிச யதார்த்தவாதம் என்பது மனிதன் இன்று எப்படி இருக்கிறான் என்பதை மட்டும் அல்ல், நாளை எப்படி இருப்பான், இருக்க வேண்டும் என்பதையும் சித்தரிப்பதாக அமையவேண்டும் என்று விளக்குகின்றது.

கலை இலக்கியம் என்பது சமுதாய மாற்றத்திற்கு பயன்பட வேண்டும் என்பதே சோசலிச எதார்த்தவாதத்தின் நோக்கம் ஆகும். இக்கோட்பாட்டில் அரசியல் முதன்மை இடம் வகிக்கிறது. ஆகவே இந்த வாதம், கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது.சோசலிச யதார்த்தவாதத்தின் அழகியல் அடிப்படைகளைக் காண்போம்.

1. பொதுவுடைமைத் தத்துவத்தில் ஈடுபாடு

2. மக்களுக்குத் தொண்டு செய்தல்

3. சுரண்டப்படும் வர்க்கத்திற்கு சார்பாக நிற்றல்

4.தொழிலாளர் போராட்டங்களில் நெருங்கிய தொடர்பு வைத்தல்

5. சோசலிச மனித நேயம்

6. உலகப் பார்வை

7.சமுதாயம் முன்னேக்கித்தான் வளரும் என்ற நம்பிக்கை

8. உருவ வாதம், அகநோக்கு பழமைவாதம் ஆகியனவற்றுக்கு எதிர்ப்பு.

நன்றி - philsophydebate

Friday, September 4, 2009

அமைப்பியல் வாதம்


(அமைப்பியல் - பின்-அமைப்பியல்)

இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியைத் தாண்டியும் மார்க்சியக் கொள்கைகள் அறிவியல், சமூகவியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் புத்தொளிப் பாய்ச்சிப் புதிய தெளிவையும் புரித¬லையும் அளித்து வந்தன. அறுபதுகளுக்குப் பின்னர் அமைப்பியல், பின்-அமைப்பியல் போன்ற தத்துவங்கள் தோன்றி வளர்ந்தன.

மார்க்சியத்தை அடுத்த கட்டத்திற்கு வளர்த்து விட்டதாக அமைப்பியல் உரிமைப் பாராட்டிக் கொள்கின்றது. சமூகத்தின் மேற்கட்டுமானம், பொருளாதார அடித்தளமானத்தைப் பிரதிபலிக்கின்றது என்பது மார்க்சியக் கோட்பாடு ஆகும். இதிலிருந்து மேற்கட்டுமானமாகிய இலக்கியம் போன்றவை தனித்து இயங்கவியலாது என்பது பெறப்படுகின்றது. ஆனால் கலை, பண்பாடு போன்ற மேற்கட்டுமானம் பொருளாதார உறவிலிருந்து தனித்து இயங்க வல்லது என்று அல்தூசர் என்ற அமைப்பியலறிஞர் கூறுகின்றார்.

அதுமட்டுமின்றி அடித்தளம் மேற்கட்டுமானம் என்பவற்றில் எந்த ஒன்றும் மையம் அல்லது குவிமையம் அல்லது சாராம்சம் எதையும் பெறமுடியாது என்று அவர் கூறுகின்றார். இதன் மூலம் அடித்தளம் மேற்கட்டுமானம் ஆகியவற்றை சாராம்சப்படுத்தும் மார்க்சியப் பார்வையை விமரிசனத்துக்குட் படுத்துகின்றார்.

ஒரு பொருளில் பல உறுப்புக்கள் இருக்கின்றன. ஆனால் அவை பிரிக்க இயாலாதவாறு இணைந்திருக்கின்றன. ஒன்று மற்றொன்றை பாதித்து மாற்றி வளர்ப்பதாக உள்ளது. இந்த உறுப்புக்கள் முழுமை ஒன்றில் உயிர்ப்புடன் ஒன்றிணைந்து இருக்கின்றன. இந்த அமைப்பு அப்பொருளின் கட்டுமானத்தைக் குறிக்கின்றது. இதுதான் அமைப்பு குறித்து அமைப்பியல் தரும் விளக்கம் ஆகும்.

அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் அந்த அமைப்பினைப் படைப்பு எனக் கொள்ளாமல் பனுவல் என அது கொள்கிறது. பனுவலுக்குள்ளேயே ஒரு கலை வடிவத்தின் அல்லது இலக்கியத்தின் அழகும் பொருளும் எல்லாமும் இருக்கின்றன; வெளியே அல்ல என்று அமைப்பியல் கூறுகின்றது.
படைப்பாளி மற்றும் படைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வழங்காமல் வாசகனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது அமைப்பியல். இது அமைப்பியலின் ஒரு முக்கிய கோட்பாடாகும்.

பனுவல் என்பது இயங்குதல் தன்மை கொண்ட பல பகுதிகள் கொண்டது. அந்தப் பகிதிகள் ஒரு முழுமையின் பகுதிகளே யன்றித் தனிமை யானவை அல்ல என்றும் அத்தகைய பகுதிகளை வாசகன் எவ்வாறு புரிந்து கொள்கிறான்; வாசகனுனுடைய புரிதல் தன்மைகள் பனுவலின் விசேடத் தன்மைகள் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்றும் அமைப்பியல் விளக்குகின்றது.

அமைப்பின் ஒரு பகுதியை அல்லது ஓர் உறுப்பை ஆராய்கின்ற போது அந்த ஒழுங்கிணைவுக்குள்ள அதன் உறவோடு ஆராய வேண்டும் என்பதை அமைப்பியல் வலியுறுத்துகின்றது.
இது தவிர, கதைப்பின்னல், இருநிலை எதிர்வு ஆகியன அமைப்பியலின் இதர சிறப்பான அம்சங்களாகும்.

அதாவது கதை அல்லது நிகழ்ச்சி வருணனையில் நிகழ்வுகளின் பண்புகள் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வகையான பண்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் அமைப்பு கட்டமைக்கப்படுகின்றது என்று லெவி ஸ்ட்ராஸ் என்ற அமைப்பியல் அறிஞர் கூறுகின்றார். அத்தகைய பண்புகளின் எதிர்நிலையான அம்சங்கள்தான் அமைப்பு கட்டமைக்கப்படுவதற்கு காரணமாக அமைகின்றன. உதாரண்மாக தொல் மானுடவியல் அடிப்படையில் பண்பு மற்றும் பண்பாடு என்பது ஒரு இருநிலை எதிர்வு ஆகும். இதை விவரித்தவர் லெவி ஸ்ட்ராஸ் ஆவர்.

மேலும், கதைப்பின்னல் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகள் கதைத்தன்மை உடையனவாக எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

பனுவலுக்கு வெளியே அழகும் செய்தியும் இல்லை; அதற்கு உள்ளேதான் இருக்கின்றது என்று அமைப்பியல் கூறுகின்றது; அதேபோல் ஒரு முறை வாசித்தவுடன் கிடைக்கிற பொருள் அதன் பொருள் அல்ல; மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது பொருள்களின் பல உண்மைகள் புலப்படுகின்றன என்றும் அந்தப் பனுவல் பல வாசிப்புத் தளங்களைக் கொண்டது என்றும் அந்த வாசிப்புத் தளங்கள் இன்னொரு இணை பனுவலைக் கட்டமைக்கின்றன என்றும் பனுவலின் உண்மை அது கட்டவிழ்க்கப்படுகிற போது வெளிப்படுகின்றது என்றும் பின்-அமைப்பியல் கூறுகின்றது.

அமைப்பியலின் வளர்ச்சியாகவும் அதன் பல்வேறு அம்சங்களை மறுப்பதாகவும் பின்-அமைப்பியல் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. இதற்கு வித்திட்டவர்கள் ரோலந் பார்த், டெர்ரிடா, மிக்கேல் பூக்கோ, லக்கான், ஜுலியஸ் கிறிஸ்தோவா மற்றும் பால் டிவேர் ஆகியோர் ஆவர்.

மார்க்சிய திறனாய்வுக்கு படைப்பு, படைப்பாளி, சமுகப் படிமாணங்கள் முக்கியமானவை ஆகும். அமைப்பியல் பனுவல், வாசகன் ஆகியவற்றை முதன்மைப் படுத்தியது. படைப்பிலிருந்து நகர்ந்து அதன் முக்கியத்துவம் பனுவல் எனும் கட்டுக்கோப்பான அமைப்பை என்று போலன் பார்த் என்ற பிரபல பிரஞ்சுத் திறனாய்வாளர் கூறுவார்.

இலக்கியம் என்பது வரையறைக்களுக்கு உட்பட்ட பொருள்களைக் கொண்டதாகும். அதாவது அது தன்னுள் முடிவு பெற்ற ஓர் அமைப்பு என்று கருதப்பட்டது. ஆனால் பன்முகமான தளங்களை நோக்கிப் பனுவலின் விளக்கம் பயணம் புரிகின்றது.
அமைப்பியல் என்பது ஒரு கலை வடிவம் அல்லது சிந்தனை வடிவத்தின் கட்டமைப்புப் பற்றிப் பேசுகின்றது. அமைப்பு என்பது தன்னளவில் முழுமையானது; அதன் அழகு, அதன் செய்தி எல்லாம் அமைப்புக்கு உள்ளேயே இருக்கின்றது; வெளியே அல்ல என்று சொல்லுகிறது. அமைப்பியல் படைப்பாளிக்கு முக்கியத்துவம் தருவதில்லை; வாசகனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

பின்-அமைப்பியல் பனுவல் என்ற கருத்து நிலையை முன்வைத்து அது எவ்வாறு தனக்குள் முடியாமல் அதனைச் சார்ந்து புறத்தே இருக்கின்ற வற்றோடும் உறவு கொண்டிருக்கின்றது என்று பேசுகின்றது. பனுவலின் உள்கட்டமைப்புக் கூறுகள் தமக்குள் பிணைந்தும் முரண்பட்டும் புதிய தளம் நோக்கி நகர்கின்றது என்றும் அது பேசுகின்றது. அதனுடைய சிறப்பான கருத்தியல்களில் பன்முக வாசிப்பு என்பதும் கட்டவிழ்ப்பு என்பதும் மிக முக்கியமானவை ஆகும்.

தமிழவன், அ.மார்க்ஸ் போன்றோர் அமைப்பியலைத் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தி யவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

நன்றி (philosophical debates )

பின் நவீனத்துவம்


கலை, இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் பெரிதும் தாக்கம் பெற்றுவரும் பின்நவீனத்துவம், பின் அமைப்பியலுக்கு பிறகு உருவான கோட்பாடாகும். இது மார்க்சியத்தின் தொடர்ச்சியாக வந்த பிந்தைய சிந்தனையாகும். இப்போக்கானது, இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச் சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது என்றுக் கூறப்படுகின்றது.
நவீனத்துவத்தை மறுத்து பின் நவீனத்துவம் வளர்ந்தது எனலாம்.

நவீனத்துவம் வளர்த்துவிட்ட கருத்தாக்கங்களை எல்லாவற்றோடும் முரண்பட்டு மறுத்து விடுகின்றது எனப் புரிந்து கொள்ளலாம். இறைவன், தனிமனிதன், உணர்வு, அறிவு, சமூகம், மானுடவிடுதலை போன்ற நவீனத்துவ கருத்தாக்கங்களை மையமாகக் கொண்டு மொத்த உலக நோக்கும் கட்டியெழுப்பப் படுவதைப் பின்நவீனத்துவம் மறுதலிக்கிறது.


பின் நவீனத்துவம் வரலாற்றுத் தொடர்ச்சியை ஏற்காது. சமூக முழுமையை ஏற்காது. ஒருமையை ஏற்றுக் கொள்ளாது. துண்டு துண்டானவை, தொடர்பற்றவை, பன்முகத் தன்மை கொண்டவை போன்றவற்றை அங்கீகரிக்கும்.


பின் நவீனத்துவம் குறிப்பிட்ட எந்த ஒரு குறிப்பிட்ட தத்துவக் கருத்தாக்கத்தை மட்டும் எதிர்க்கவில்லை. சமூகம் இதுவரை கண்ட அனைத்து கருத்தாக்கங்களையும் மறுத்து விமர்சிக்கின்றது. அனைத்தையும் சந்தேக மனப்பான்மையைக் கொண்டு பார்க்கின்றது.
பூக்கோ, லக்கான், தெரிதா போன்ற பின் அமைப்பியல் அறிஞர்களும், லியோதார்த், பூதலியார்த், பார்த், ஜேம்சன், எட்வர்டு சயது போன்றோரும் பின் நவீனத்துவக் கருத்தை பிரபலபடுத்தியவர்களாவர்.


இவர்களில் பின் நவீனத்துவச் சிந்தனையின் ஆதாரமான தத்துவ, அரசியல் வரையறைகளை முன் வைத்தவராக லியோதார்த்தைக் குறிப்பிடுவார்கள். இவர் 1979-ல் பிரெஞ்சு மொழியிலும், 1984-ல் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளிவந்த அவரது ' பின் நவீனத்துவ நிலை ' என்ற நூல்தான் பின் நவீனத்துவம் குறித்த தத்துவ வரையறைகளை தெளிவுபடுத்தியது.


தத்துவங்கள் கூறுகின்ற உண்மைகள் மீதும் விஞ்ஞானம் கூறிவருகின்ற உண்மைகள் மீதும் தீவிர ஐயப்பாடுகளை எழுப்பியவர்தான் மைக்கேல் பூக்கோ என்ற பின் நவீனத்துவ அறிஞர் ஆவர். இவர் மனித மனங்களின் மீது படிந்துக் கிடக்கும் வரலாற்றுக் காலங்களின் கருத்தாக்கங்களின் தொகுப்பான கதையாடல் மூலம் மனிதர்களை எவ்வாறு நெறிப்படுத்தி யிருக்கின்றன என்பதனை அகழ்வு ஆய்வு செய்தார்.


பின் நவீனத்துவம் எழுப்பும் பிரச்சனைகள் ஒன்று, அறிவுக்கும் உண்மைக்கும் உள்ள உறவு பற்றியதாகும். பெரும்பாலும் எல்லா தத்துவங்களும் அறிவு என்பது உண்மையோடு நேரடியான உறவைக் கொண்டுள்ளது என்பதை வலியுறுத்தி வந்துள்ளன. ஆனால், பின் நவீனத்துவம் அவ்வாறு கருதவில்லை. இதை மறுக்கின்றது.

இரண்டாவது, தனிமனித மையம் குறித்த பிரச்சனையாகும். தத்துவ வரலாறு முழுக்க தனிமனித மையம் என்ற கருத்தாக்கம் ஊடாடி வந்துள்ளதை அறியலாம். இதையும் பின் நவீனத்துவம் மறுப்பதைக் காணலாம்.
மூன்றாவது பிரச்சனை ஒட்டுமொத்தப்படுத்தல் என்ற கருத்தாக்கம் ஆகும். பின் நவீனத்துவம், பிரபஞ்ச முழுமைக்கும், சமூகம் முழுமைக்குமான தத்துவக் கருத்தாக்கங்களை கேள்விக்குள்ளாக்குகின்றது.


நான்காவது பிரச்சனை அறிவே அதிகாரம் என்பதாகும். சமூக வரலாற்றில் அறிவு உற்பத்தி ஏற்றதாழ்வான சமூக அமைப்பை நியாயப்படுத்துவதாகவும் அதிகாரத்தின் கருவியாகவும் செயல்பட்டு வந்திருக்கின்றது என்று பின் நவீனத்துவ அறிஞர் பூக்கோ கூறுவதைக் காணலாம். பின் நவீனத்துவம் பகுத்தறிவை ஏற்காது.


ஐந்தாவது அதிகாரம் பற்றிய பிரச்சனையாகும். அரசு போன்ற சுரண்டல் வடிவங்கள் மட்டுமின்றி குடும்பம் , கல்வி நிறுவனம், சமயம் , பிற சமூகக் கலாச்சார நிறுவனங்கள் அனைத்திலுமே அதிகாரம் செயல்படுவதாக பூக்கோ கூறுகின்றார். அறிவு எப்போதும் அதிகாரத்துடனே நெருக்கமாக இருக்கும் என்பது பின் நவீனத்துவத்தின் கூற்றாகும்.


பின் நவீனத்துவச் சிந்தனைகள், சமூகக் கலாச்சார வாழ்வில் வழக்கிலிருக்கும் அடக்குமுறையின் நுட்பமான வடிவங்களை அடையாளப்படுத்தவும் விமர்சிக்கவும் செய்கின்றது.

நவீனத்துவத்தை மறுத்து பின் நவீனத்துவம் வளர்ந்தது எனலாம். நவீனத்துவம் வளர்த்துவிட்ட கருத்தாக்கங்களை எல்லாவற்றோடும் முரண்பட்டு மறுத்து விடுகின்றது எனக் கண்டோம்.
வரலாறு, பண்பாடு, தேசிய அடையாளம் போன்ற பெருங்கதை யாடல்களை நவீனத்துவம் வளர்த்து விட்ட கருத்தாக்கங்களாகும். ஆனால் பின் நவீனத்துவம் இது போன்ற பெருங்கதையாடல்களை மறுத்துக் கூறி உள்ளூர் கதையாடல்களை முன்வைக்கின்றது. இந்த வகையில் மார்க்சியத்தையும் பெருங்கதையாடல்கள் வரிசையில் சேர்த்து விடுகின்றது.
அதுமட்டுமின்றி, அறிவியல், வரலாறு, தேசிய ஒற்றுமை போன்ற பெருங்கோட்பாடுகளை புறக்கணித்து உள்ளூர் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கின்றது. வரலாறானது உடைந்த துண்டு துண்டான நிகழ்வுகளின் ஒன்று சேர்க்கப்பட்ட கலவைதான் என அது கூறுகின்றது.


ஒருங்கிணைக்கப்பட்ட அறிவுக்குப் பதிலாக துண்டாடப் பட்ட புத்தியையும், அடையாள ஒற்றுமைக்குப் பதிலாக பல சிதறுண்ட அடையாளத்தையும், பின் நவீனத்துவம் முன் வைக்கின்றது.
உயர்ந்த, தாழ்ந்த பண்பாடுகள் எதிர்வு நிலையில் பாகுபட்டவையாக பார்ப்பதை மறுத்து உயர்ந்த, தாழ்ந்த பண்பாடுகளுக்கு இடையிலான பாகுபாடு மறைந்து போவதாக பின் நவீனத்துவம் கூறுகின்றது.


இவ்வாறு பின் நவீனத்துவத்தின் கூறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அடுத்ததாக பின் நவீனத்துவ கருத்தாக்கங்களை உருவாக்கிய அறிஞர்களையும் அவர்களது பங்களிப்புகளையும் பார்க்கலாம்.
சொற்களும் அவை பிறப்பிக்கின்ற அர்த்தங்களும் எப்போதும் நிரந்தரமாக காலா காலத்திற்கும் ஒரே அர்த்தத்தை கொண்டிருக்க முடியாது. மாறாக, முடிவில்லாத அர்த்தங்களை கொண்டவையாக இருக்கும். ஒரு சொல்லைப் படைத்த படைப்பாளி கொண்டிருக்கும் அர்த்தம் தற்காலிக ஒரு வெளிப்பாடாகும். அது பின் வாசிக்கின்ற ஒவ்வொருவரின் வாசிப்பிற்கேற்ப புதிய புதிய அர்த்தங்கள் அச்சொல்லில் இருந்து சுரந்துக் கொண்டே இருக்கும். ஒரு எழுத்தினுள் இரண்டு முறை ஒரே மாதிரி பயணிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் அது பல்வகைப்பட்ட அர்த்த வெளிப்பாடுகள் பிறந்துக்கொண்டே இருக்கும்.


ஒரு சொல்லை விளக்க வருகின்ற அச்சடிக்கப் பட்ட அகராதியனது அர்த்தச் சுரத்தலை நிறுத்திவிடும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. ஆனால் மொழிக்குள் சொற்களின் அர்த்தமானது, தொடர்ச்சியான மாற்றங்களைப் புதுப்பிக்கும் விளையாட்டை நிகழ்த்திக் கொண்டே யிருக்கின்றன. இதுதான் கட்டுடைத்தல் என்ற பின் நவீனத்துவக் கருத்தாக்கம் ஆகும்.


இவ்வாறாக நிலையான ஒற்றைத் தன்மைக்கு மாறாக முடிவுறாத பன்மைத் தன்மையைத் தான் பின் நவீனத்துவம் கோருகின்றது. இத்தகைய மொழி விளையாட்டை நிகழ்த்திய அல்ஜீரியா நாட்டை சேர்ந்த, பின் அமைப்பியல்வாதியும் பின் நவீனத்துவத்துவ அறிஞரும் ஆன தெரிதா ஆவார்.

முதலாளித்துவ உற்பத்தியையும் தொழில் நுட்பத்தையும் இணைத்ததாக பிற்கால முதலாளித்துவம் இருந்ததைத் தனது நூலில் லியோதார்த் குறிப்பிடுகிறார். முந்தைய முதலாளித்துவ உற்பத்தி முறையின் அதிகாரம் தொழிற்சாலையை மையப்படுத்தியதாக இருக்க, இன்றைய உற்பத்தி முறையின் அதிகாரம் தகவலை மையமாகக் கொண்டிருப்பதை அவர் முன்வைக்கின்றார்.


அடுத்ததாக பின் நவீனத்துவத்தை மார்க்சிய தர்க்கத்தின் வழியில் கோட்பாட்டு உருவாக்கம் செய்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.


பின் நவீனத்துவத்தை முதலாளியக் காலகட்டதின் ஒரு தருணமாக பிரெடெரிக் ஜேம்சன் போன்றவர்கள் வரையறுக்கிறார்கள். இவர் ஒரு அமெரிக்க மார்க்சியர். இவர் பின் நவீனத்துவத்தை மார்க்சிய தர்க்கத்தின் வழியில் கோட்பாட்டு உருவாக்கம் செய்தவர்களில் முதன்மையானவர். இவர் எழுதிய "பின் நவீனத்துவம்: பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சார தர்க்கம்" என்ற நூலில்தான் பின் நவீனத்துவத்தின் கூறுகளை விரிவான முறையில் விமர்ச்சித்துள்ளார்.


ஜேம்சனை தொடர்ந்து, பின் நவீனத்துவம் குறித்து கோட்பாட்டு உருவாக்கத்தில் ஈடுபட்டவர் டெர்ரி ஈகிள்டன் என்ற பிறிதொரு மார்க்சியராவார். இவர் தன் "பின் நவீனத்துவத்தின் பிரமைகள்" என்ற நூலில் மூலம் தனது விமரிசனத்தை முன் வைத்தார்.

கடந்த இருபது ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தைக் கோட்பாட்டு உருவாக்கம் செய்யும் முயற்சி மார்க்சியர்களிடையே நடைபெற்று வருகின்றது. இம்முயற்சியை மேற்கிலும் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் ஈடுபட்டு வருவதைக் காணயியலும்.


தமிழகத்திலும் கூட பின் நவீனத்துவக் கோட்பாடுகள் அரசியல், இலக்கியம் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம். அதேபோன்று பின் நவீனத்துவக் கோட்பாடுகளை விமரிசனம் செய்யும் போக்கும் தமிழக மார்க்சியர்கள் இடையே இருந்து வருகின்றது.


இத்தகைய விமரிசனப் போக்கை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் அணுகுமுறைகள் இரு வகைகளில் அமைகின்றன. ஒன்று, பின் நவீனத்துவத்தை முற்றிலும் எதிர்நிலையில் நின்று விமர்சிக்கிற நிலைபாடு. நிறுவனமயமான கட்சிகளைச் சேர்ந்த மரபு மார்க்சிய வாதிகள் இத்தகைய நிலைபாட்டைக் கொண்டிருக்கின்றனர்.


இரண்டாவது, முழுக்க ஏற்காமலும், நிராகரிக்காமலும் அணுகுகின்ற நிலைப்பாடு. நிறுவனமயமான கட்சிகளைச் சாராத மார்க்சிய அறிஞர்கள் பின் நவீனத்துவத்தை விமரிசன கண்ணோட்டத்தில் அணுகுவதோடு, மார்க்சியத்திற்கும் இதற்கும் நிலவும் பொதுவான அம்சங்களை இனங்கண்டு, அங்கீகரிக்கவும் செய்கின்றனர்.


நன்றி- ( philosophical debates )